

ஜெயா தொலைக்காட்சிக்கு தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கே:- பிறருடைய முகம் கோணாமல் பேசும் பக்குவம் உங்களுக்கு எப்படி வந்தது.
ப:- எதையும் சீரியசாக எடுத்து கொள்ள மாட்டேன். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தா லும் சபாஷ்... இவ்வளவு தானா? என்று நினைப்பேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நினைப்பேன். என்னை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
இந்த அணியில் கலைஞருக்கு அடுத்து நான்தான் சீனியர். வக்கீலுக்கு படித்தவன். வாதிடும்போது சண்டை போடுற மாதிரி பேசுவேன். வெளியில் வந்தவுடன் என்னய்யா காபி சாப்பிடலாமா என்று கேட்பேன். கொள்கையில் பல மாற்றங்கள் இருக்கலாம். அனைவரிடமும் நட்பு பாராட்ட வேண்டும் என்று நினைப்பேன். மாற்று கட்சியை தாக்குவதில் என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை என்னை விமர்சிக்க மற்ற கட்சிகளுக்கும் உண்டு. இந்த சபையிலேயே நன்றாக பதில் கூறிய பல மந்திரிகளை பாராட்டி உள்ளேன். ஒரு வீரன் இன்னொரு வீரனை பாராட்ட வேண்டும்.
கே:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றிடத்தை யாரும் நிரப்ப முடியாது. அவர் உயிரோடு இருந்திருந்தால் தலைமை செயலகத்தில் ரெய்டே நடந்திருக்காது என்று கூறியுள்ளீர்கள். இது போன்ற விஷயங்களை அவர் இருக்கும் போதே கூறி இருந்தால் நல்ல பரஸ்பரத்துக்கு அடித்தளமாக இருந்திருக்குமே?
ப:- சபையிலேயே என்னோடு ஜெயலலிதா நன்றாக பேசுவார். நான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு திரும்பிய போது உடல் நலமும் விசாரித்துள்ளார். யாரிடம் திறமை இருந்தாலும் நான் பாராட்ட தயங்கமாட்டேன்.
கே:- ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போது சினிமா மாயையில் வந்தாரே? என்று குறைத்து மதிப்பிட்டதுண்டா? அந்த கணிப்பு தவறாகி பின்னர் அவர் மிகப்பெரிய ஆளுமையாக நின்றதை எப்படி பார்க்கிறீர்கள்?
ப:- ஒரு மனிதனை சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் சில நேரங்களில் உருவாக்கி விடுகிறது. அந்தம்மாவுக்கு தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இவ்வளவு மந்திரிகள் இருந்தார்களே அப்போது யாராவது பேசினார்களா? அவர்கள் உளறுவார்கள் என்று தெரியும். அதனால்தான் எல்லாவற்றையும் நானே பேசிக் கொள்கிறேன் என்று வைத்திருந்தார். இப்போது தெரிகிறதா? ஜெயலலிதா ஏன் இவர்களை பேச விடவில்லை என்று அமைச்சர்களின் திறமை அவ்வளவு தான் என்று ஜெயலலிதாவுக்கு தெரியும்.
ஒரு மந்திரி டெங்கு வந்தால் வீட்டு முன்பு சாணம் தெளிக்க கூறுகிறார். இன்னொரு மந்திரி பிரதமர் மன்மோகன்சிங் என்கிறார். இன்னொரு மந்திரி தண்ணீர் வெப்பமாகாமல் தடுக்க தெர்மாகோல் போட்டு மூடுகிறார். இதையெல்லாம் கேட்க ஆள் இல்லை.
இன்று கவர்னர் ஆய்வு செய்கிறார். மாநில கவர்னர் அரசு, கேபினட்டில் எடுத்த முடிவுக்கு அனுமதி கொடுக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். இன்னொன்று மத்திய அரசுக்கு உளவு சொல்வது. எந்த காரணத்தை கொண்டும் அரசு செய்யும் வேலையை கவர்னர் செய்யக் கூடாது.
கவர்னர் மந்திரியாக இருந்தவர். பத்திரிகை நடத்தியவர். இதனால் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. இங்குள்ள அமைச்சர்கள் அடிமைகளாக இருந்து கவர்னரின் நடவடிக்கையை சரி என்று கூறினால் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் காரி துப்புவார்கள்.
இதைப்பார்த்து மற்ற மாநில கவர்னர்களும் இது போன்று செய்ய நினைப்பார்கள். அங்குள்ள அரசு இதனை அனுமதிக்காது. ஆந்திராவிலோ, மேற்கு வங்காளத்திலோ, கவர்னர்கள் இதுபோன்று செய்ய முடியுமா?
கவர்னர் செய்த வேலையை ஆட்சியாளர்கள் செய்திருக்க வேண்டும், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும். நாங்கள் எல்லாம் அதுபோன்ற கூட்டத்தை கூட்டினோம். கேள்விகளை எழுப்பியுள்ளோம். படிக்க தெரியாதவன் படிக்க தெரிஞ்சவன் கிட்ட கடிதத்தை கொடுத்து படிக்க சொல்வது போல இருக்கிறது கவர்னரின் ஆய்வு.
கே:- கருணாநிதி நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் இந்த ஆட்சி எப்போதோ தூக்கி வீசப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்களே? அப்படி அவர் என்ன தான் செய்திருப்பார்.
ப:- யாரையாவது ஆதரித்து அவர்கள் ஆட்சி அமைத்தாலும் சரி, அல்லது அவர்கள் ஆதரித்து நீங்கள் ஆட்சி அமைத்தாலும் சரி, மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வருங்காலத்தில் வரலாற்றில் கெட்ட பெயர் வரும்.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் ஏமாந்து போனவர் ஓ.பி.எஸ். ஏமாற்றியவர் எடப்பாடி. மெதுவாக கொண்டு வந்து நீங்கள் துணை முதல்-அமைச்சர் பதவியை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி கிரீடத்தை கொடுத்து தலையை வெட்டி விட்டார்.
எடப்பாடி குத்துவிளக்கு ஏற்றுகிறார். பின்னர் ஓ.பி.எஸ். கைகட்டி நிற்கிறார். பாவமாக உள்ளது. அதுபோன்று நான் எல்லாம் அரசியலில் இருக்க மாட்டேன்.
கே:- மோடி-கருணாநிதி சந்திப்பின் மூலம் தி.மு.க. பக்கமும் பா.ஜனதா துண்டை போட்டு வைத்துள்ளதா?
ப:- அவர் எந்த நினைப்போடு வந்தாலும் கவலை இல்லை. முதிர்ந்த அரசியல் தலைவர் என்கிற முறையிலேயே கருணாநிதியை மோடி சந்தித்தார்.
எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் எங்களை விட்டு விலகி சென்றார். அது நீண்ட நாளாகி விட்டது. இப்போது அதைப்பற்றி பேசவேண்டியதில்லை.
ஜெயலலிதாவின் கடைசி கால கட்டத்தில் கலைஞர் எங்களிடம் இப்படி சொன்னார். அந்த அம்மாவுக்கு ஒன்றும் ஆகக் கூடாது. ஒரு வேளை ஏதாவது நடந்தால் கட்சி இரண்டாகும். அப்போது ஒரு பிரிவினர் ஆட்சியை அமைக்க ஆதரவு கேட்பார்கள். எந்த அணியையும் ஆதரிக்க கூடாது. களத்தில் நின்றே வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.