ரூ.400 கோடி பேரம் பேசி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: துரைமுருகன் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. அரசு தனியார் பஸ் உரிமையாளர்களிடம் ரூ.400 கோடி பேரம் பேசி பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
ரூ.400 கோடி பேரம் பேசி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: துரைமுருகன் குற்றச்சாட்டு
Published on

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடந்த பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசு தனியார் பஸ் உரிமையாளர்களிடம் ரூ.400 கோடி பேரம் பேசி கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குறிப்பாக ரவுடிகள் ஒன்று சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுப் போய்விட்டது. நகைப்பறிப்பு சம்பவங்கள் தலைவிரித்தாடுகிறது.

நமது மாவட்டத்தில் கொலைகள் ஏராளமாக நடக்கிறது. அமைதி, வளம், வளர்ச்சி என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு எதிர்கட்சிகளிடம் பேசி இருக்க வேண்டும்.

அவர்கள் சட்டசபையை சொந்தவீடு என்று நினைத்துவிட்டார்கள். அவர்களை வெளியே தூக்கிப்போடும் காலம் வரும். 7 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவர்கள் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. எந்த பிரச்சினையையும் தீர்க்கவில்லை.

அ.தி.மு.க. கட்சிக்குள் அவர்களுக்குள்ளே அவர்களை கவிழ்க்க ‘மங்காத்தா’ விளையாடுகிறார்கள். தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் தான் தமிழகத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது.

தமிழகத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரியதாக ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளனர். கல்வி கெட்டுப்போய் விட்டது. பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்களில் பலர் பணம் கொடுத்துள்ளனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தி.மு.க. அழிந்து விடும் என்றார். அவருக்கு ஒரு பதில் கூறுகிறேன். அண்ணா விதைத்த தி.மு.க.வை, மன்னாதி மன்னர்களை மண்ணை கவ்வ வைத்த கழகத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. ஓய்வு எடுக்கும் சிங்கம் கலைஞர் வழியிலேயே அவரது சிங்கக்குட்டி ஸ்டாலின் இயக்கத்தை கட்டிக் காப்பாற்றுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com