

புதுடெல்லி:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா கட்சி தலைமை ஏற்ற பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தமிழக கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். அதேநேரம் தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
கடந்த மாதம் 27-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
சபாநாயகர் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி கூறியிருந்தனர்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக திமுக இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே, இது தொடர்பாக எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #DMK #MLADisqualify