அம்மா இருசக்கர வாகன திட்டத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

ஒரு திட்டத்திற்கு மாற்றாக இன்னொரு திட்டத்தை கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Published on

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், நகரப் பேருந்துகளில் பயணிப்பதற்கு தாய்மார்கள், சகோதரிகளுக்கு இலவசமாக பயணம் செய்கின்ற வாய்ப்பை முதல்-அமைச்சர் தந்து இருக்கிறார் என்றும், பெட்ரோல், டீசல் விலை இன்றைக்கு உயர்ந்திருக்கின்ற இந்த நிலையில் இருசக்கர வாகனத் திட்டம் தொடர்ந்தால், இன்னும் அவர்களுக்கு மேலும் கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அதாவது, இந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டது என்பது தான் இதற்குப் பொருள். தி.மு.க. அரசின் இந்த செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப் பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல். ஒரு திட்டத்திற்கு மாற்றாக இன்னொரு திட்டத்தை கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

இன்னும் சொல்லப் போனால், இலவச பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், நாட்கள் செல்ல செல்ல மகளிர் இலவச பேருந்து திட்டம் நீர்த்துப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மகளிர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது என்பதாலும், பிரதமரால் ‘அம்மா’ என்கிற அடைமொழியுடன் கூடியத் திட்டம் என்பதாலும், இத்திட்டத்தை தி.மு.க. அரசு முடக்கியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒவ்வொரு திட்டத்திற்கும் மூடுவிழா நடத்தும் வேலையைத் தான் தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது.

‘சொன்னதை செய்வோம் ‘என்பதை விட’ சொல்லாததையும் செய்வோம்’ என்பது தான் கடந்த 11 மாதகால தி.மு.க. ஆட்சியின் சாதனை. கொடியவன் என்று மக்களிடம் கெட்ட பெயர் வாங்கும் அரசனின் ஆட்சி விரைவில் வீழ்ந்து விடும் என்று வள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தினை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என்று முதல்- அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com