

தமிழகத்தில் இன்று 21-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. 4 வகையாக பிரிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரையில் 9 கோடியே 60 லட்சத்து 470 தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
முதல் தவணை 90.48 சதவீதம் போடப்பட்டு உள்ளது. இது நல்ல இலக்கு என்றாலும் 100 சதவீதத்தை நோக்கி பயணிக்கிறோம். 2-வது தவணை 69.33 சதவீதம் செலுத்தப்பட்டு உள்ளது. 4 கோடியே 17 லட்சத்து 232 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
இன்னும் 90 லட்சம் பேர் 2-வது தவணை போடாமல் உள்ளனர். அவர்களை கண்டறிந்து போடும் பணி தொடர்ந்து நடைபெறும். 15-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 80 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 4 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பை கண்டறிய அதிநவீன கருவிகள் 10 மாவட்டங்களில் பயன்பாட்டில் உள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு நவீன கருவிகள் கொள்முதல் செயவதற்கான பணிகள் நடக்கிறது.
புற்றுநோயை முதல் நிலை, 2-வது நிலையை கண்டுபிடித்து விட்டால் காப்பாற்றி விடலாம்.
தமிழகத்தில் புற்றுநோயால் ஆண்டுக்கு 70 முதல் 80 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கு பாதிப்பை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. 2030-க்குள் குறைந்தது 3-ல் 2 பங்காவது (66 சதவீதம்) புற்றுநோய் பாதித்த முதல் மற்றும் 2-வது நிலை கண்டுபிடிப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த இலக்கு நிறைவேறும்போது புற்றுநோய் உயிரிழப்பு சரிபாதியாக குறைய வாய்ப்பு உள்ளது.
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 முதல் 45 சதவீதமாக இருந்த இறப்பு 24 சதவீதமாக குறைந்துள்ளது.
இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிப்பதை போல எதிர்காலத்தில் மக்கள் அ.தி.மு.க.வை புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறும்போது, “கொரோனா பரவல் குறைந்து வருவதால் முகக்கவசம் அணியக்கூடாது என்பது இல்லை. பொதுமக்கள் அடுத்த 2 வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
இந்த ஆய்வின்போது மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் ஜெயந்தி சென்றனர்.
இதையும் படியுங்கள்...பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு