search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு
    X
    வீடு

    சென்னை மற்றும் புறநகரில் 10 லட்சம் பேர் வீட்டுக்கடன் தவணை கட்டமுடியாமல் தவிப்பு

    கொரோனா முதல் அலையின்போது தவணை கட்ட 6 மாதங்கள் சலுகை வழங்கப்பட்டது. இப்போது 2-வது அலையில் அந்த மாதிரி சலுகைகள் வழங்கப்படவில்லை.
    சென்னை:

    சென்னையில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்து லட்சக்கணக்கானவர்கள் வேலை பார்க்கிறார்கள். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அதிகம். தொடக்கத்தில் அந்த நிறுவனங்கள் சம்பளத்தை வாரி வழங்கியது.

    இதனால் பலர் வீடுகள் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். வங்கிகளும் வேலை பார்ப்பவர்களை துரத்தி பிடித்து கடன் கொடுத்தது.

    இதனால் வாடகை வீடுகளில் குடியிருந்தவர்கள் சொந்த வீட்டு கனவில் வாங்கினார்கள். குறைந்தபட்சம் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர்களும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கி குடியேறினார்கள். இதனால் ரியல் எஸ்டேட் தொழிலும் வளர்ந்தது.

    6.50 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை வட்டி. ஜாமீன் எதுவும் தேவையில்லை என்று இலகுவான முறைகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முதல் தனியார் வங்கிகள் வரை கடன்களை கொடுத்தது.

    கடன் வாங்கியவர்களும் மாத சம்பளத்தில் பெரும் பகுதியை கடன் தவணையாக செலுத்தினார்கள். சொந்த வீடு என்ற சந்தோஷத்தில் அந்த கடன் சுமையை பெரிதாக நினைக்காமல் கட்டிவந்தார்கள்.

    கொரோனா வைரஸ்

    கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா இந்த மாதிரியான மாத சம்பளவாசிகளின் கனவை சிதைத்துவிட்டது. குறைந்த சம்பளம் பெற்றுவந்த பலர் வேலையை இழந்தனர். பலருக்கு சம்பள குறைப்பு ஏற்பட்டது.

    இதனால் தவணை கட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். கொரோனா முதல் அலையின்போது தவணை கட்ட 6 மாதங்கள் சலுகை வழங்கப்பட்டது. இப்போது 2-வது அலையில் அந்த மாதிரி சலுகைகள் வழங்கப்படவில்லை. இப்படி பல்வேறு சூழ்நிலைகளால் கடன் தவணை செலுத்த முடியாமல் இருக்கிறார்கள்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டுக்கடன் பெற்றுள்ளார்கள். அவர்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தவணை செலுத்தவில்லை.

    இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘3 மாதங்களுக்கு மேல் தவணை தொகை கட்டாவிட்டால் வாராக்கடனாக அறிவித்து வீட்டை கையகப்படுத்துவார்கள்.
    கொரோனா
    2-வது அலை இன்னும் ஓயாததால் நடவடிக்கை தொடங்கவில்லை.

    நடவடிக்கை எடுக்க தொடங்கியதும் ஒருவேளை 60 சதவீதம் பேர் வரை கட்ட முயற்சிப்பார்கள். எப்படியும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஏலத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதை தவிர்க்க ஏதாவது சலுகை திட்டங்களை அரசு அறிவித்தால் நல்லது’ என்றனர்.



    Next Story
    ×