மத்திய அரசு - அ.தி.மு.க இடையே உள்ள இணக்கம் தினகரன் வெற்றிக்கு காரணமா?

மத்திய அரசுக்கும் மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கும் இடையே உள்ள இணக்கத்தின் மீதான வெறுப்பு தினகரன் வெற்றிக்கு உதவியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு - அ.தி.மு.க இடையே உள்ள இணக்கம் தினகரன் வெற்றிக்கு காரணமா?
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் அபார வெற்றியை ருசித்துள்ளார். ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கும், எதிர்க் கட்சியான தி.மு.க.வுக்கும் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகரில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற தினகரன் 40,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்தப்படியாக அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 48 ஆயிரத்து 306 ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தார். தி.மு.க. வேட்பாளரான மருதுகணேஷ், 24,651 ஓட்டுகளை மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்தார். இது தி.மு.க.வுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தினகரன் பெற்ற வெற்றிக்கு அடுக்கடுக்காக பல்வேறு காரணங்கள் புகார்களாகவே கூறப்படுகின்றன. அ.தி.மு.க. சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன், தி.மு.க.வுடன் ரகசிய கூட்டு வைத்து அ.தி.மு.க.வை வீழ்த்தி உள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹவாலா பாணியில் பணம் கொடுத்து தினகரன் வெற்றி பெற்று விட்டார்” என்று குற்றம் சாட்டி உள்ளார்.

இதுபோன்று தினகரன் பெற்ற வெற்றிக்கு கூறப்படும் காரணங்கள் அணிவகுத்துக் கொண்டே இருக்கின்றன. தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிரடி மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

இரட்டைஇலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட புகாரிலும் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இரட்டை இலை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு எடப்பாடி அணிக்கு அதை வாங்கி கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இப்படி தினகரன் மீது தொடுக்கப்பட்ட எதிர்ப்பு கனைகள் அனைத்தும் மத்தியில் உள்ள மோடி அரசால் ஏவிவிடப்படு வதாகவே குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத தினகரன் சிறையில் இருந்து வெளிவந்ததும் தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார். மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலுடன் கூறினார்.

மத்திய அரசே தினகரனுக்கு நெருக்கடி கொடுப்பதாக சாமானிய மக்களும் முணுமுணுத்தனர். அதே நேரத்தில் ஒன்றுபட்ட அ.தி.மு.க. மத்திய அரசுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொண்டது. புதுவையைப் போல தமிழகத்திலும் கவர்னர் ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டார்.

இதுவும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காரணங்களால் மோடி எதிர்ப்பு என்பது ஆர்.கே.நகரில் வெளிப்படையாகவே காணப்பட்டது. இதுவே ஆர்.கே.நகரில் தினகரனை வெற்றி பெறச் செய்துள்ளது.

தினகரனின் இந்த வெற்றிக்கு ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள மீனவர்களின் வாக்குகளும் முக்கிய காரணமாக அமைந்திருந்தன.

ஒகிபுயல் பாதிப்பு ஏற்பட்டபோது மீனவர்கள் நடத்திய போராட்டமும், தமிழக அரசு மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் தினகரனுக்கு சாதகமாக மாறின. அதே நேரத்தில் ஓட்டுப் பதிவு அன்று 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியானதும் தினகரன் வெற்றிக்கு இன்னொரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

2ஜி விவகாரத்தில் மோடி அரசு தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்பட்டு விட்டதாகவே பரவலாக பேசப்பட்டது. இது முஸ்லிம்கள் தினகரனுக்கு ஓட்டுகளை வாரி வழங்குவதற்கு காணமாக இருந்ததாகவும் கணிக்கப்படுகிறது.

இப்படி மோடி எதிர்ப்பு வி‌ஷயங்கள் அனைத்துமே ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவு அலையாக மாறி போனது. இதுவே அவரை அபார வெற்றி பெற வைத்துள்ளது என்கிற கருத்தே பரவலாக உள்ளது.

டி.டி.வி.தினகரனின் இந்த அரசியல் வேகம் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com