கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழாவை எளிமையாக கொண்டாட முடிவு

கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழாவை எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
மைசூரு தசரா விழா
மைசூரு தசரா விழா
Published on: 

பெங்களூரு :

பெங்களூருவில் மந்திரி சி.டி.ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க மைசூரு தசரா விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. என்றாலும், மைசூரு தசரா விழாவை கொண்டாடுவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் கூடிய விரைவில் உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அப்போது கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் மைசூரு தசரா விழாவை எளிமையாக கொண்டாடுவது, அதற்கான விதிமுறைகள், ஜம்பு சவாரி நடத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பாவின் உத்தரவின் பேரில் தசரா விழா கொண்டாட்டத்திற்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். தசரா விழாவை தொடங்கி வைப்பவர் யார்? என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அதுபற்றியும் முதல்-மந்திரி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தான் முடிவு எடுக்க உள்ளோம்.

தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டாலும், தசராவுக்கான சம்பிரதாயங்கள்படி அனைத்தும் பின்பற்றப்படும். கொரோனா பரவல் இருப்பதால் மக்கள் அதிகஅளவில் கூடாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படாது. கடந்த ஒரு ஆண்டில் மந்திரிகளின் செயல்பாடுகள் குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருவதாக நீங்கள் (நிருபர்கள்) தான் சொல்கிறீர்கள். எனக்கு நானே பரிசீலனை செய்து கொள்வேன். எனது செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட துறைகளில் இனிவரும் நாட்களில் எந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்து சிந்தித்து வருகிறேன்.

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். அவர் கூறும் குற்றச்சாட்டு உண்மை அல்ல. டி.கே.சிவக்குமாரின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்க வேண்டிய நிலை பா.ஜனதாவுக்கு வரவில்லை. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் தான் மடாதிபதிகள், முக்கிய தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டது. ஒருவரின் தொலைபேசி அழைப்பை ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் பா.ஜனதா அரசுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.      

X

Maalai Malar
www.maalaimalar.com