கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள 15 அம்ச கட்டுப்பாடுகள்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்கள் தேவையில்லாமல் பஸ்கள், ரெயில்கள், விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் போன்ற 15 அம்ச கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
முக கவசம் அணிந்து செல்லும் பெண்கள்
முக கவசம் அணிந்து செல்லும் பெண்கள்
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு நேற்று 15 அம்ச அறிவுரை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள 15 அம்சங்கள் வருமாறு:-

1. நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களும் மூடப்படுகின்றன. மாணவர்கள் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும்.

2. கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். ஆன்லைனில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கலாம்.

3. தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும்.

4. பெரிய நிறுவனங்கள் ஆலோசனை கூட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த வேண்டும்.

5. ஓட்டல்கள், விடுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் உடனுக்குடன் செய்யப்படும். கைகள் கழுவுவதற்கு ஓட்டல்கள், விடுதிகளில் கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும்.

6. திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தப்பட வேண்டும். புதிய நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது.

7. உள்ளூர் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தாமல் ஒத்திவைக்க வேண்டும்.

8. பொதுமக்கள் அதிகம் கூடும் வகையில் ஆன்மிக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக்கூடாது.

9. வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். சந்தைகளில் பொதுமக்கள் நெருக்கமாக இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

10. அனைத்து வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் வரும் வகையில் ஏற்பாடு செய்வது நல்லது.

11. பொதுமக்கள் தேவையில்லாமல் பஸ்கள், ரெயில்கள், விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

12. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சிறுவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்ற அறிவுரையை டாக்டர்கள் வழங்க வேண்டும்.

13. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கை குலுக்க வேண்டாம். பாசத்துடன் கைபிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

14. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எங்கிருந்து என்ன பொருட்கள் வாங்குகிறீர்கள் என்பதில் கவனம் தேவை.

15. கொரோனா வைரஸ் தொடர்பான தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். வாட்ஸ்அப்பில் தேவையற்ற தகவலை பரப்பாமல் அமைதி காப்பது நல்லது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com