மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் டெல்லியில் வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம்
Published on

புதுடெல்லி:

பா.ஜனதா கட்சியும், பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மத்திய அரசின் இந்த தவறான நிர்வாகத்தை மக்களிடம் எடுத்துச்செல்லும் நோக்கில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது.

இந்த கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

மத்தியில் ஆட்சிக்கு வருமுன் நாட்டு மக்களுக்கு பா.ஜனதா கட்சி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியது. ஆட்சிக்கு வந்த பிறகும், ‘ஸ்மார்ட் சிட்டி’ உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை கடந்த 4 ஆண்டுகளாக அந்த கட்சி அறிவித்தது. ஆனால் இதில் பெரும்பாலான திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.

நாட்டில் சிறந்த நாட்களை (அச்சே தின்) கொண்டு வருவோம் என கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் எந்த துறையிலும் அந்த நாட்கள் வந்திருப்பதாக உணரப்படவில்லை. அதற்கு மாறாக பயம், வெறுப்பு, வன்முறை போன்ற ஒரு சூழல்தான் நாடு முழுவதும் நிலவுகிறது.

ஒரே செயல்திட்டத்தை பா.ஜனதா ஒருபோதும் பின்பற்றியதில்லை. மாறாக சூழ்நிலைக்கு ஏற்ப தங்களின் செயல்திட்டங்களை மாற்றி வருகிறது. அவர்களின் உண்மையான முகம் இதன்மூலம் அம்பலமாகி இருக்கிறது.

பா.ஜனதா மற்றும் மோடி அரசின் இத்தகைய தவறான நிர்வாகத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் காங்கிரஸ் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 29-ந்தேதி மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கட்சித்தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உரையாற்றுகின்றனர். இதில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.  #tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com