விழுப்புரத்தில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் மோதல்- நாற்காலி வீச்சு

விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் மோதல்- நாற்காலி வீச்சு
Published on

விழுப்புரம்:

கூட்டுறவு வங்கி தேர்தல் சம்பந்தமாக விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு அ.தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.பி., தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராஜேந்திரன், ஏழுமலை மற்றும் சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கூட்டுறவு வங்கி தேர்தலில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்வது சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

நகர செயலாளர் பாஸ்கரன், மாணவரணி செயலாளர் ராமசரவணன், இளைஞரணி செயலாளர் பசுபதி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஜெகன், மணவாளன், இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி, முன்னாள் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் செந்தில், மல்லிகா, எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தனுசு, மருத்துவரணி டாக்டர் கலைசெல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவு பெறும் நேரத்தில் விக்கிரவாண்டி இளைஞரணியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அங்குள்ள நகர செயலாளர் பூர்ணாராவ் பற்றி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் குறை கூறினார்.

இதற்கு அமைச்சர், பார்க்கலாம் என்றார். அப்போது அருகில் இருந்த ஆரணி தொகுதி எம்.பி., ஏழுமலை கோபம் அடைந்தார். குறை சொல்கிற இடமா இது, வெளியே போ என அவர் பிரகாஷிடம் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த அவர், வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து, அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.பி.யின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாற்காலிகளை தூக்கி வீசினர். உடனே அமைச்சர் சி.வி.சண்முகம், லட்சுமணன் எம்.பி. ஆகியோர் கார்களில் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதைத்தொடர்ந்து நகர செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com