

பெங்களூருவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் கொடூரமான முறையில் கொன்றுள்ளது. இது கண்டிக்கத்தக்கது ஆகும். பாகிஸ்தான் ஒரு கயமைத்தனம் கொண்ட நாடு. இந்த பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் சவால் விடுத்துள்ளது. மத்திய அரசுக்கு அரசியல் தைரியமும் உள்ளது, அழிக்கும் தைரியமும் உள்ளது.
நாங்கள் உறுதியாக உள்ளோம். எந்த நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை செய்வோம். மத்திய அரசு ஏற்கனவே இதில் இறங்கிவிட்டது.
மத்திய அரசு எந்த மாதிரி பதிலடி கொடுக்கும் என்பதை பகிரங்கமாக இப்போது சொல்ல முடியாது. ராணுவ மந்திரி ஏற்கனவே இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானுடன் நல்லுறவை தான் இந்தியா விரும்புகிறது. ஆனால் அந்த நாடு அதுபோல் நடந்து கொள்ளவில்லை.
எல்லையில் அத்துமீறலில் ஈடுபடுவது, ராணுவ வீரர்களை கொடூரமாக கொல்வது போன்ற மோசமான செயல்களில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. இவை கண்டிக்கத்தக்கவை ஆகும். பாகிஸ்தானுக்கு மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்கும்.
அண்டை நாடு, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது, நிதி உதவி வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பான அரசு உள்ளது.
மத்திய அரசின் உதவியுடன் அந்த மாநில அரசு அங்கு பிரச்சினைக்கு தீர்வு காணும். நாட்டின் நலன் கருதி காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ஆக்கக்கூடாது.