இந்தியா கொண்டு வரப்பட்டதும் விஜய் மல்லையா மும்பை ஜெயிலில் அடைக்கப்படுவார்: மத்திய அரசு அறிவிப்பு

தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்பட்டதும் மும்பை, ஆர்தர் சாலையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்படுவார் என்று இங்கிலாந்திற்கு மத்திய அரசின் உள்துறை பதில் அனுப்பியுள்ளது.
இந்தியா கொண்டு வரப்பட்டதும் விஜய் மல்லையா மும்பை ஜெயிலில் அடைக்கப்படுவார்: மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்.

லண்டன் புறநகர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் அவர் தங்கியிருக்கிறார்.

விஜய் மல்லையாவிடம் பணத்தை இழந்த வங்கிகள் ஒன்று சேர்ந்து, அவரது சொத்துக்களை விற்று, பணத்தை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்றாலும் இன்னமும் முழுமையான பணத்தை வங்கிகளால் பெற இயலவில்லை.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

விஜய் மல்லையாவை பிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா, இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது. முதலிடம் இங்கிலாந்து அதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து விஜய் மல்லையாவை ஒப்படைப்பது பற்றி இங்கிலாந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தியாவில் விஜய் மல்லையா எப்படி நடத்தப்படுவார்? எந்த ஜெயிலில் அடைக்கப்படுவார்? ஜெயிலில் அவருக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்படும்? என்பன போன்றவற்றை தெரிவிக்கும்படி இந்தியாவிடம் இங்கிலாந்து விவரம் கேட்டுள்ளது.

இங்கிலாந்தின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மத்திய அரசின் உள்துறை பதில் அனுப்பியுள்ளது. அதில், “தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்பட்டதும் மும்பை, ஆர்தர் சாலையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்படுவார். இந்த சிறை அதிகபட்ச பாதுகாப்பு வசதி கொண்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா தனது மனுவில், “ஆர்தர் சாலை ஜெயிலில் அறை எண். 12-ல் விஜய் மல்லையா அடைக்கப்படுவார். அந்த அறை எல்லா வசதிகளும் நிரம்பியது” என்று தெரிவித்துள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டிலும் வழங்கப்பட்டுள்ளது. இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com