மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக அரசு தயங்குகிறது: ஜி.கே.வாசன் பேச்சு

தமிழக அரசு தனது அதிகாரங்களை எல்லாம் மத்திய அரசிடம் இழந்து நிற்கிறது. எந்த பிரச்சினைக்கும் எதிர்த்து குரல் கொடுக்க தமிழக அரசு தயங்குகிறது என்று ஜி.கே.வாசன் பேசினார்.
மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக அரசு தயங்குகிறது: ஜி.கே.வாசன் பேச்சு
Published on

திருச்சி:

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசியதாவது:-

தமிழக மக்களின் நலன், தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தியே இந்த கூட்டம் நடைபெறுகிறது. குற்றச்சாட்டுக்கு உட்படாத அரசியல் கட்சிகளே இல்லை என்ற நிலையில், த.மா.கா. எவ்வித குற்றச்சாட்டுக்கும் உட்பட்டதே இல்லை. பணம், பதவிக்காக த.மா.கா. நடத்தப்படவில்லை.

த.மா.கா.வை புறக்கணித்தவர்களும் அரவணைத்து அழிக்க நினைத்தவர்களும் ஏளனம் பேசியவர்களும் தூற்றியவர்களும், நண்பர்களை போல பழகி துரோகிகளாக மாறியவர்களும் உண்டு. ஆனால் அவர்களெல்லாம் இன்று முகவரியின்றி திரிகின்றனர்.

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி, எம்.எல்.ஏ., எம்.பி. பதவி பெறுவது மட்டும் அரசியல் கட்சியின் சாதனை அல்ல. கொள்கை, லட்சியம், மக்கள் மனதில் இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. அதனடிப்படையில் வரும் நாட்களில் த.மா.கா.வுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இருப்பர்.

த.மா.கா.வின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள் நம்மை பற்றி ஊடகங்களில் அவதூறாக செய்தி கொடுத்துள்ளனர். அதை யாரும் நம்ப வேண்டாம். த.மா.கா.வுக்கு கடந்த காலம் கசப்பானதாக இருந்தாலும் வருங்காலம் வசந்த காலமாக இருக்கும்.

மத்திய பா.ஜ.க. அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ். டி., திட்டக்குழு கலைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாகினர். ஜி.எஸ்.டி. விதிப்பால் நாடு முழுவதும் வணிகர், நுகர்வோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

தமிழக அரசு தனது அதிகாரங்களை எல்லாம் மத்திய அரசிடம் இழந்து நிற்கிறது. எந்த பிரச்சினைக்கும் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக அரசு தயங்குகிறது. கோட்டையில் அமர்ந்து கொண்டே டெல்லியில் தமிழக பிரச்சினைகளில் சாதித்தவர் ஜெயலலிதா. அதற்கு நேர்மாறாக இப்போது டெல்லிக்கு பல முறை படையெடுத்தாலும் தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பி பார்க்க வில்லை.

மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைக்க வில்லை. வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. குடி நீர் பிரச்சினை தீர்க்கப்பட வில்லை. இவற்றுக் கெல்லாம் தமிழகத்தை மாறி மாறி 40 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தான் காரணம். காவிரி பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளன.

தமிழகத்தில் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். மதுவிலக்கு அமல் படுத்த வேண்டும். கல்வி, விவசாயம் முன்னேற வேண்டும். த.மா.கா. ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் அல்ல. தமிழகத்தை ஆளப் போகும் கட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com