மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ரெயில் - பஸ் மறியல் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் ரெயில் மற்றும் பஸ் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டம் குறித்து எம்.எல்.ஏ. உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ரெயில் - பஸ் மறியல் போராட்டம்
Published on

தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இதேபோல் கும்பகோணத்திலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் கும்பகோணம் பஸ் நிலையத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் கும்பகோணம் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் நகர செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் தாராசுரம் அசோக்குமார், கணேசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், நகர தலைவர் மிர்சாவுதீன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சுமார் 250-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் பஸ் நிலையத்தில் திடீரென அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். பஸ் முன்பு தி.மு.க.வினர் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் சிலர், பஸ் நிலையத்தில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகியின் பழக்கடையை திடீரென சூறையாடினர். அங்கிருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசியதால் பதட்டம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து தி.மு.க.வினரை விரட்டியடித்தனர்.

இதற்கிடையே பஸ் நிலையத்தில் தொடர்ந்து தி.மு.க.வினர் மறியல் செய்ததால் மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், சாக்கோட்டை அன்பழகன் உள்பட சுமார் 250-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை கணபதி நகரில் இன்று காலை 9.45 மணியளவில் திருச்சி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறித்து போராட்டம் நடத்தினர்.

கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் மாவட்ட செயலாளர் நீலமேகம், முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், மறியல் செய்த 50 பேரை கைது செய்தனர்.

தஞசை அருகே பூதலூர் அடுத்த அய்யனாபுரம் ரெயில் நிலையத்தில் தி.மு.க சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. மன்னார்குடி- மானாமதுரை பயணிகள் ரெயில் இன்று காலை வந்த போது பூதலூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் மயில்சாமி தலைமையில் தண்டவாளத்தில் அமர்ந்து கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து டி,எஸ்,பி, அன்பழகன், சப்-இன்ஸபெக்டர் கரிகாற் சோழன் மற்றும் போலீசார் தி.மு.க.வினர் 50 பேரை கைது செய்தனர். இதனால் ரெயில் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

ஒரத்தநாடு ஒன்றிய தி.மு.க. செயலாளர் காந்தி தலைமையில் தி.மு.க.வினர் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com