சட்டசபை-பாராளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தம்பித்துரை கருத்துக்கு எஸ்.ஆர்.பி. எதிர்ப்பு

சட்டசபை-பாராளுமன்றத்துக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தால் தமிழக அரசின் பதவிகாலம் 2 வருடம் குறைந்துவிடும் என்று தம்பித்துரை கருத்துக்கு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சட்டசபை-பாராளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தம்பித்துரை கருத்துக்கு எஸ்.ஆர்.பி. எதிர்ப்பு
Published on

சென்னை:

தேர்தல் செலவுகளை குறைப்பதற்காக பாராளுமன்ற தேர்தலையும், சட்ட மன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை பாராளுமன்ற துணை சபாநாயகரும் அ.தி. மு.க. எம்.பி.யுமான தம்பித்துரை வரவேற்றுள்ளார்.

தம்பித்துரையின் கருத்துக்கு அ.தி.மு.க.வின் மேல் சபை எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது கேலிக்குரியது.

பிரதமர் தன்மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்களில் இருந்து தப்பிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார். மோடியின் தேவையற்ற நடவடிக்கைகளால் பல மாநிலங்கள் தங்கள் பதவிக்காலத்தை ஏன் தியாகம் செய்யவேண்டும்?

இந்தியாவில் 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் மட்டும் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கேட்பதற்கு நன்றாக இருக்கும், ஆனால் நடை முறையில் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

தமிழகத்தின் தற்போதைய அரசின் பதவிக்காலம் 2021 வரை இருக்கிறது. 2019-ல் ஒரே நேரத்தில் தேர்தலை சந்தித்தால் 2 ஆண்டு பதவியை இழக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்ட பல பணிகளை தொடரமுடியாத நிலை ஏற்படும்.

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பேப்பரில் பார்க்கமட்டும் தான் நன்றாக இருக்கும். நடைமுறைக்கு ஒத்துவராது.

மாநில தேர்தல், மாநில பிரச்சினைகள், திட்டங்களை அடிப்படையாக வைத்து நடை பெறுவது. மத்திய தேர்தல் நாட்டு பிரச்சினைகளை முன்வைத்து நடப்பது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் யாருக்கு ஓட்டு போடுவது என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படும். வீணான குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும் வகையில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com