புதுச்சேரி: தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் - உருவ பொம்மை எரிப்பு

திருமாவளவனை விமர்சனம் செய்ததால் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து புதுவை பஸ்நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அவரது உருவ பொம்மையை சிலர் எரித்தனர்.
புதுச்சேரி: தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் - உருவ பொம்மை எரிப்பு
Published on

புதுச்சேரி:

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி விமர்சித்து இருந்தார்.

இதையடுத்து திருமாவளவன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான, தவறான செய்திகளை தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுவதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும் புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று காலை புதிய பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்துக்கு அக்கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், சுடர்வாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் பஸ் நிலைய வாயிலில் அமர்ந்து பஸ்களை செல்லவிடாமல் தடுத்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கும் போது திடீரென ஒரு பிரிவினர் தமிழிசை சவுந்தர்ராஜன் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். உடனே போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தையினரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com