செய்திகள்
இந்திய வீரர்களுக்கு சீன மொழி பயிற்சி- எல்லைப்பகுதியில் மேலும் 50 கண்காணிப்பு சாவடிகள்
இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் மேலும் 50 கண்காணிப்பு நிலைகளை உருவாக்கவும், இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு சீன மொழி பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படையினரின் 56-ம் ஆண்டு எழுச்சிநாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்றார்.
அங்கு இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பேசிய ராஜ்நாத் சிங், இந்த படையின் உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் நவீனமயமாக்கப்படும் என குறிப்பிட்டார்.
கடமையின்போது 50 சதவீதம் அளவுக்கு காயமடைந்த வீரர்களுக்கு படை வீரர்களுக்கான நலநிதியில் இருந்து உதவி செய்வதற்கான திட்டன் பரிசீலனையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், சீன வீரர்களுடன் அடிக்கடி ஏற்படும் மோதல் போக்கை தவிர்க்கும் வகையில் தற்போது இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் பணிக்கான பயிற்சியுடன் சீன மொழியை பேசும் பயிற்சியும் அளிக்கப்படுவதாக கூறினார்.

