டி.டி.வி.தினகரனுக்கு மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு

வேலூர் செங்குட்டுவன், திண்டுக்கல் உதயகுமார் ஆகிய 2 எம்.பி.க்கள் சேர்ந்திருப்பதால் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
டி.டி.வி.தினகரனுக்கு மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு
Published on

சென்னை:

அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலா குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கி விட்டு செயல் பட மறைமுகமாக காய்களை நகர்த்தியபடி உள்ளனர்.

அ.தி.மு.க.வில் மொத்தம் 134 எம்.எல்.ஏ.க்களும், 50 எம்.பி.க்களும் உள்ளனர். இவர்களில் 113 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுமார் 40 எம்.பி.க்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர்.

டி.டி.வி.தினகரனுக்கு 21 எம்.எல்.ஏ.க்களும், 4 எம்.பி.க்களின் ஆதரவும் உள்ளது. இந்த நிலையில் டி.டி.வி.தினகரனிடம் உள்ள 21 எம்.எல்.ஏ.க்களில் சிலரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.

தற்போது டி.டி.வி.தினகரன் பக்கம் 9 எம்.எல்.ஏ.க் கள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தெம்பும், புத்துணர்ச்சியும் அடைந்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

எடப்பாடியின் வேகமும், வியூகமும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே “ஸ்லீப்பர் செல்”களாக இருக்கும் தங்கள் ஆதரவாளர்களை வெளிப்படையாக டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி இன்று காலை 2 எம்.பி.க்கள் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு டாடா காட்டி விட்டு தினகரன் பக்கம் வந்துள்ளனர். திண்டுக்கல் தொகுதி எம்.பி. உதயகுமார், வேலூர் தொகுதி எம்.பி செங்குட்டுவன் ஆகிய இரு வருமே அந்த எம்.பி.க்கள்.

இவர்களில் வேலூர் செங்குட்டுவன் எம்.பி., ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த 12 எம்.பி.க்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அ.தி.மு.க. எம்.பி.க்களும் என்ன நோக்கத்துக்காக தினகரன் பக்கம் சாய்ந்தனர் என்று தெரியவில்லை.

டி.டி.வி.தினகரனுக்கு மக்களவை எம்.பி.க்களில் கோவை நாகராஜ் மட்டுமே ஆதரவாளராக இருந்தார். மேல்-சபை அ.தி. மு.க. எம்.பி.க்களில் விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் தினகரன் பக்கம் உள்ளனர்.

தற்போது மேலும் 2 எம்.பி.க்கள் சேர்ந்திருப்பதால் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com