கொரோனா: ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கித்தவித்த 119 இந்தியர்கள் மீட்பு

ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கித்தவித்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் தனிவிமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தனர்.
நாடு திரும்பிய இந்தியர்கள்
நாடு திரும்பிய இந்தியர்கள்
Published on

புதுடெல்லி: 

ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4-ம் தேதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

இதனால், அந்த கப்பலில் இருந்த செய்த பயணிகள் ஜப்பானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு படிப்படியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. 

இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 630-க்கும் அதிகமானோர் உடனடியாக கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் 100-க்கும் அதிகமான பயணிகள் தீவிர பரிசோதனைகளுக்கு பின்னர் வைரஸ் பரவவில்லை என உறுதியான பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 132 ஊழியர்கள் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் 12 பேருக்கு கொரோனா பரவி இருந்தது. 

வைரஸ் பரவாத எஞ்சிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. மேலும், வைரஸ் பாதிக்கப்படாத இந்தியர்களை உடனடியாக சொந்தநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கும் படியும் ஜப்பான் அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்படாத 119 இந்தியர்களை அழைத்துசெல்ல ஜப்பான் அரசு அனுமதிவழங்கியது.

இந்நிலையில், ஜப்பானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கியிருந்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி அழைத்துவரப்பட்டவர்களில் இலங்கை, நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்த ஜப்பான் அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com