உடலின் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும் ‘அடிசன் நோய்’: தொடக்கத்திலேயே கண்டறிவது எப்படி?

அடிசன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் விடுபட்ட ஹார்மோன்களை ஈடுசெய்யும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Adrenal Crisis
Published on

அடிசன் நோய் அல்லது முதன்மை அட்ரினல் பற்றாக்குறை என்பது உடலின் முக்கிய செயல்பாடுகளுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் அட்ரினல் சுரப்பிகள் சேதமடைவதால் ஏற்படும் ஒரு அரிதான மருத்துவ நிலையாகும்.

சிறுநீரகங்களின் மேல் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறிய சுரப்பிகள், உடலின் வளர்சிதை மாற்றம், ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கார்டிசோல் மற்றும் அல்டோஸ்டிரோன் ஆகிய அத்தியாவசிய ஹார்மோன்களைப் போதுமான அளவில் சுரக்கத் தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது.

தொடக்கக் கட்ட அறிகுறி

இந்நோயின் ஆரம்பக்கால அறிகுறிகள் மனச்சோர்வு அல்லது சாதாரண காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இதனால் இதனைத் தொடக்கத்திலேயே கண்டறிவது சவாலாக அமைகிறது. தீவிர சோர்வு, தசை பலவீனம், மனநிலை மாற்றம், பசியின்மை, உடல் எடை குறைதல் மற்றும் அதிக தாகம் ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். நோய் தீவிரமடைதல் தலைச்சுற்றல், மயக்கம், தசைப்பிடிப்பு, கடுமையான சோர்வு மற்றும் சருமம் அல்லது உதடுகள் கருமையாதல் போன்ற மாற்றங்கள் உடலில் தோன்றும்.

நோய் ஏற்படுவதற்கான முதன்மை காரணங்கள்

உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறாகச் செயல்பட்டு, அட்ரினல் சுரப்பியின் வெளி அடுக்கைத் தாக்கி அழிப்பதே இந்நோய் ஏற்படுவதற்கு 70 முதல் 90 சதவீதக் காரணமாக அமைகிறது. இது தவிர, காசநோய் போன்ற தீவிர நோய்த்தொற்றுகள் அட்ரினல் சுரப்பிகளைப் பாதிப்பதாலும் அரிதாக இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே இந்நோய் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

வாழ்நாள் சிகிச்சை

அடிசன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் விடுபட்ட ஹார்மோன்களை ஈடுசெய்யும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சையின் மூலம் இந்நோயாளிகள் இயல்பான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்.

எனினும், மருந்தைச் சரியாக உட்கொள்ளத் தவறினாலோ அல்லது பிற கடுமையான நோய்கள் தாக்கினாலோ உடலின் கார்டிசோல் அளவு திடீரெனக் குறைந்து 'அட்ரினல் கிரைசிஸ்' எனும் ஆபத்தான நிலை ஏற்படக்கூடும். கடுமையான குமட்டல், குழப்பம், காய்ச்சல் மற்றும் திடீர் பலவீனம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நிலை ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுவது மிக அவசியமாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com