‘ஜெயிலர் 2’ படத்திற்கு நா.த.க. தலைவர் சீமான் வாழ்த்து!

நேற்று திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.
‘ஜெயிலர் 2’ படத்திற்கு நாதக தலைவர் சீமான் வாழ்த்து!
Published on: 

‘ஜெயிலர் 2’ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

“தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும், பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்!

புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது.

'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ரஜினிகாந்திற்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சனுக்கும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரனுக்கும், இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமாக 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகி நேற்று (அக்.15) திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மிர்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாபர் சாதிக் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், விஜய் சேதுபதி, அபேக்ஷா போர்வால், மிதுன் சக்ரவர்த்தி, அன்னா ராஜன், ஹக்கிம் ஷா, பகவதி பெருமாள், மேகனா ராஜ், பூர்ணா மற்றும் ஜதின் சர்னா ஆகியோர் புதிய முகங்களாக இணைந்துள்ளனர்.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com