காலை 6 மணி காட்சிக்கு எதிர்ப்பு: சீமானுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்

மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய, பிரபல நடிகர்கள் நடித்த தமிழ்த் திரைப்படங்கள், வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகிவிடுகின்றன.
சீமான்
Published on: 
Summary

தமிழ்த் திரையுலகில் அதிகாலை 6 மணி காட்சிகளை அனுமதித்த முதலமைச்சரின் முடிவை சீமானின் கடிதம் எதிர்க்க, தயாரிப்பாளர்கள் சங்கம் அதற்கு பதிலளித்து, உலகெங்கும் ஒரே நேரத்தில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாவதன் முக்கியத்துவத்தை விளக்கி, இந்த அனுமதி திரையுலகின் நலனுக்காகவே எனக் கூறியுள்ளது.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளர் டி.சிவா, பொருளாளர் தனஞ்செயன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மனவேதனை

புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில், அதிகாலை 6 மணி முதல் ஒரு வாரத்திற்கு 6 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று மிகுந்த அக்கறையுடன், தமிழ்த் திரையுலகிற்கு ஆதரவளித்து அனுமதி வழங்கிய முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செயல்பாடு குறித்து, தாங்கள் 2026 நவம்பர் 4-ம் தேதியிட்ட கடிதத்தைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்து இக்கடிதத்தை அனுப்புகிறோம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய, பிரபல நடிகர்கள் நடித்த தமிழ்த் திரைப்படங்கள், வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகிவிடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அத்திரைப்படங்கள் காலை 9 மணிக்குத்தான் திரையிடத் தொடங்குகின்றன. அதற்குள் தவறான விமர்சனங்களும், படத்தைக் குறித்த எதிர்மறையான கருத்துகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, இங்கு திரைப்படம் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்சனைகளைத் தமிழ்த் திரையுலகம் சந்தித்து வருகிறது.

இதற்குத் தீர்வாக, உலகெங்கும் தமிழ்த் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை முதலமைச்சரிடம், அமைச்சர் ராஜ்மோகன் மூலமாக எடுத்துச் சென்றோம். எங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உடனடியாக அனுமதி வழங்கிய முதலமைச்சரை ஒட்டு மொத்தத் தமிழ்த் திரையுலகமே பாராட்டி வருகிறது.

ஆனால், இந்த அனுமதி வழங்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, இத்தகைய அனுமதி ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் ஒரு செயலாகும் என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசைக் குறை கூறி தாங்கள் கடிதம் வெளியிட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அதிலும், தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராகவும், தற்போது பல திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகராகவும் திகழும் தாங்கள், எதற்காக இந்த அனுமதியை நாங்கள் கோரிப் பெற்றோம் என்பதை அறியாமல் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X