

இந்துஸ்தான் யாருடைய தந்தையின் தனிப்பட்ட சொத்தும் அல்ல என பாடகர் தில்ஜித் தோசாஞ்ச் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் தில்ஜித் தோசாஞ்ச் 'ஆரா இந்தியா டூர் 2026' என்ற தலைப்பில் நாடு முழுவதும் இசைச்சேரிகளை மேற்கொண்டு வருகிறார்.
தில்ஜித் பஞ்சாபி சினிமாவில் முன்னணி நடிகரும் ஆவார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான தேரே பாஸ் மெய்ன் படம் சூப்பர்ஹிட் ஆனது.
அதேநேரம் அவர் நடித்த 'பஞ்சாப் 95' படம் 'சத்லுஜ்'என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியிடப்பட்ட இரண்டே நாட்களில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
அப்படம் பஞ்சாபில் 90களில் நிகழ்ந்த கலவரங்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுவடே இல்லாமல் காணாமல் போனவர்களை பற்றி இப்படம் அழுத்தம் திருத்தமாக பேசியிருந்ததே தடைக்கு காரணம்.
இதனிடையே தில்ஜித் உடைய இசைக் கச்சேரிகளுக்கு பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வந்தன.
நேற்று மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் அவரின் இசைக் கச்சேரி பல்வேறு தடைகளை கடந்து வெற்றிகரமாக நடைபெற்றது.
முன்னதாக அக்கச்சேரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட்டிருந்தது. மேலும் காவல்துறை அனுமதியும் கடைசி நேரத்தில் தான் வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஆட்சேபனைகளை தொடர்ந்து, 'பாட்டியாலா பெக்', '5 தாரா', 'கேஸ்' மற்றும் 'ஜாட் உத்தே ஃபயர் கர்தா' ஆகிய பாடல்களை பாட வேண்டாம் என்று காவல்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த அனைத்து சிக்கல்களுக்கும் மத்தியில் நேற்று தில்ஜித் ரசிகர்கள் மத்தியில் மேடையில் தோன்றினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 'ஜெய் ஸ்ரீ மஹாகால்' என்று முழக்கமிட்ட பின் தனக்கு நிலவும் எதிர்ப்பு குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது, "இது மஹாகாலின் பூமி. இங்கு வருவதிலிருந்து எங்களை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் முன்பும் பயப்படவில்லை, இப்போதும் பயப்படவில்லை. நீங்கள் காட்டிய ஆதரவுதான் இன்று எங்களை இங்கு கொண்டு வந்துள்ளது.
நான் இங்கு வருவதைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஒருமுறை வருவேன் என்று ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால், நான் அதிலிருந்து பின்வாங்குபவன் அல்ல. இந்த எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி, இன்று உங்கள் முன் நிற்கிறேன்." என்றார்.
தொடர்நது அவர் உருது கவிஞர் ரஹத் இந்தோரியின் பிரபலமான கஜல் பாடல் வரியை மேற்கோள் காட்டியது ரசிகர்களை பரவசம் அடையச் செய்தது.
“அகர் கிலாஃப் ஹை டூ ஹோன் டூ, ஜான் தோடி ஹை… சபி கா குன் ஹை ஷாமில் யஹம் கி மிட்டி மைன், கிசி கே பாப் கா ஹிந்துஸ்தான் தோடி ஹை” என்று தில்ஜித் முழக்கமிட்டார்.
இதன் பொருள், எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும். அதனால் உலகம் ஒன்றும் அழிந்துவிடப் போவதில்லை! போராட்டத்தின் சாராம்சமே இந்த மண்ணோடு பிணைந்திருக்கிறது. இந்த நாட்டின் மண்ணில் அனைவரின் இரத்தமும் கலந்துள்ளது. ஹிந்துஸ்தான் (இந்தியா) என்பது யாருடைய தந்தையின் தனிப்பட்ட சொத்து அல்ல. என்பதாகும்.
தில்ஜித்தின் 'ஆரா இந்தியா டூர் 2026' முதல் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 30 அன்று டெல்லியில் நடைபெற்றது. அங்கும், காவல்துறை அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகக் குழப்பம் நிலவியது குறிப்பிடத்தக்கது.
இந்தூரில் நடைபெற்ற நேற்றைய நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட காவலர்களும், 1,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.