ஓடிடியில் வெளியான இரண்டே நாளில் நீக்கப்பட்ட ‘சத்லுஜ்’ படம்: இணையத்தில் குவியும் கண்டனங்கள்!

நடிகர் தில்ஜித் தோசாஞ்சும், ""நான் இருளை சவாலாக ஏற்கிறேன்"என்று பஞ்சாபி மொழியில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எதிர்ப்பு.
ஓடிடியில் வெளியான இரண்டே நாளில் நீக்கப்பட்ட ‘சத்லுஜ்’ படம்: இணையத்தில் குவியும் கண்டனங்கள்!
Published on

பிரபல பஞ்சாபி நடிகர் மற்றும் பாடகர் தில்ஜித் தோசாஞ்ச் நடிப்பில் உருவான 'சத்லுஜ்' திரைப்படம், ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான இரண்டே நாட்களில் இந்தியாவில் திடீரென நீக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மறைக்கப்பட்ட உண்மைக்கதை..

முன்னதாக 'பஞ்சாப் 95' என்று பெயரிடப்பட்டிருந்த இத்திரைப்படம், பஞ்சாபின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. பஞ்சாபின் இருண்ட காலகட்டத்தில், அடையாளம் தெரியாமல் சட்டவிரோதமாக எரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உடல்களுக்கு நீதி கேட்டு அவர் நடத்திய போராட்டமே இப்படத்தின் மையக்கதை ஆகும்.

120 தணிக்கை வெட்டுகள்..

இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஜூலை 3 அன்று ஓடிடியில் வெளியானது. படத்திற்கு தணிக்கை வாரியம் சுமார் 120 க்கும் மேற்பட்ட வெட்டுக்களைப் பரிந்துரைத்தாகக் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு, பஞ்சாப் பற்றிய குறிப்புகள் மற்றும் கதையின் நாயகன் பற்றிய அடையாளங்களை மாற்றக் கோரிய பிறகே, புதிய தலைப்புடன் இப்படம் ரிலீசானது. ஆனால் வெளியான இரு நாட்களிலேயே நீக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் கொந்தளிப்பு..

"இது ஒரு சினிமா மட்டுமல்ல, பஞ்சாப் வரலாற்றின் மிக முக்கியமான பக்கம். உண்மைக் கதைகளை மக்கள் பார்க்க தியேட்டர்களோ, ஓடிடியோ உரிமை வழங்க வேண்டும்" என்று எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் தில்ஜித் தோசாஞ்சும், "நான் இருளை சவாலாக ஏற்கிறேன்"என்று பஞ்சாபி மொழியில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தன் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

ZEE5 நிறுவனத்தின் விளக்கம்..

இது குறித்து ZEE5 தளம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், 'சத்லுஜ் படத்திற்கும் அதன் படைப்பு சுதந்திரத்திற்கும் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். தற்போதைய சில சூழ்நிலைகளால் இந்தியாவில் தற்காலிகமாக இப்படம் நீக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான வழிகளை ஆராய்ந்து, மிக விரைவில் இப்படத்தை மீண்டும் இந்திய ரசிகர்களுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்' என்று தெரிவித்துள்ளது.

ஹனி த்ரெஹான் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் ராம்பால், கன்வல்ஜித் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com