அமெரிக்க ராணுவம் தனது போர் வியூகங்களில் ஒரு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
எதிரிகளைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்குதல் நடத்த உதவும் 'மாவென்' (Maven) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அமைப்பாக அங்கீகரித்துள்ளது.
பிரபல பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான பாலண்டிர் - Palantir, Project Maven-இன் கீழ் உருவாக்கியுள்ள இந்த ஏஐ அமைப்பு, இனி அமெரிக்க பாதுகாப்பு துறையின் போர் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும்.
செயற்கைக்கோள்கள், டிரோன்கள், ரேடார்கள் மற்றும் சென்சார்களிடமிருந்து வரும் கோடிக்கணக்கான தகவல்களை இந்த ஏஐ அமைப்பு நொடிப் பொழுதில் ஆய்வு செய்யும்.
முன்பு பல மணிநேர எடுத்த இந்த ஆய்வை இப்போது சில வினாடிகளில் முடித்து, எதிரிகளின் ராணுவ வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைத் துல்லியமாக அடையாளம் காட்டும்.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான டிரோன் தாக்குதல்களில் இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த அமைப்பு முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.
தற்போது அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து இந்த திட்டத்திற்கு நிரந்தரமாகப் பெருந்தொகை ஒதுக்கப்படும்.
ராணுவத்தின் தரைப்படை, கடற்படை, விமானப்படை என அனைத்துப் பிரிவுகளிலும் இது இனி நடைமுறைப்படுத்தப்படும்.
ஆனால் போர்க்களத்தில் ஏஐ பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
மனிதத் தலையீடு இன்றி ஏஐ தானாகவே இலக்குகளை தீர்மானிப்பது தார்மீக மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தங்களது மென்பொருள் தகவல்களை மட்டுமே வழங்குகிறது என்றும், தாக்குதல் நடத்தும் இறுதி முடிவை எப்போதும் மனிதர்களே எடுப்பார்கள் என்றும் பாலண்டிர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்துடனான இந்த பல பில்லியன் டாலர் ஒப்பந்தம் காரணமாக, பாலண்டிர் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.