நத்திங் நிறுவனம் தனது முற்றிலும் புதிய (4b) ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. கடந்த சில நாட்களாக டீசர் வெளியிடப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இந்திய தலைவர் அகிஸ் எவான்ஜெலிடிஸ் தற்போது புதிய (b) சீரிஸ் மாடல்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் a சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தள பதிவு:
இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், "நத்திங் நிறுவனத்திற்கு (b) எதைக் குறிக்கிறது? அது எங்கள் பெயரிடும் முறையின் ஒரு தொடர்ச்சி மட்டுமே. எண்கள் தலைமுறைகளை குறிக்கின்றன, அதே சமயம் எழுத்துக்கள் வெவ்வேறு தயாரிப்புப்பிரிவுகளை குறிக்கின்றன. A சீரிஸ் எங்களின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் சீரிசாக இருந்து வருகிறது; இது நத்திங்கின் சிறந்த வடிவமைப்பு புத்தாக்கத்தை கொண்டுவருவதோடு, மிகவும் முக்கியமான அம்சங்களிலும் கவனம் செலுத்துகிறது.
B சீரிஸ், ஒரு தெளிவான தயாரிப்பு படிநிலையை பராமரிக்கும் அதே வேளையில், ஒரு புதிய பிரிவில் விரிவடைவதன் மூலம் A சீரிஸின் வெற்றியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. A சீரிஸ் எங்களின் மிகவும் பிரீமியம் வரிசையாக தொடர்கிறது…," என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்க்கப்படும் விலை:
இதுவரை வெளியான தகவல்களின் படி புதிய நத்திங் ஸ்மார்ட்போன் நத்திங் போன் 3a லைட் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது. புதிய B சீரிஸ் மாடல் நத்திங் அனுபவத்தை பயனர்களுக்கு சற்றே குறைந்த பட்ஜெட்டில் வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது நத்திங் போன் 4a மாடல் ரூ. 37,999 விலையில் துவங்குகிறது. அந்த வகையில் புதிய போன் (4b) மாடலின் விலை இதைவிட குறைவாக அல்லது ரூ. 30,000-க்கும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.