விளையாட்டு

மகளிர் T20 கிரிக்கெட் தரவரிசை: ICC பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்ரீசரனி முதலிடம் பிடித்து சாதனை!

தீப்தி சர்மா 729 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற இந்த இரு வீராங்கனைகளின் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள மகளிர் T20 போட்டிகளுக்கான புதிய பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

800 புள்ளிகளை கடந்து மைல்கல்

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை தொடரில் வெளிப்படுத்திய அபாரமான பந்துவீச்சு திறமையின் மூலம் ஸ்ரீசரனி 804 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை வலுப்படுத்தியுள்ளார். சர்வதேச மகளிர் T20 கிரிக்கெட் வரலாற்றில் 800 புள்ளிகள் என்ற மைல்கல்லை கடந்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார். அத்துடன், ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட் பெற்றுள்ள 806 புள்ளிகள் என்ற வரலாற்றுச் சாதனைக்கு மிக அருகில் இவர் வந்துள்ளார்.

2-வது இடத்திற்கு முன்னேறிய தீப்தி சர்மா

ஸ்ரீசரனியைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான தீப்தி சர்மா 729 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் மகளிர் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீராங்கனைகளே கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்திய வீராங்கனைகளின் ஆதிக்கம்

சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற இந்த இரு வீராங்கனைகளின் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. இறுதிப் போட்டியில் ஸ்ரீசரனி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இத்தொடர் முழுவதிலும் தீப்தி சர்மா அதிகபட்சமாக 14 விக்கெட்டுகளையும், ஸ்ரீசரனி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

பந்துவீச்சு மட்டுமின்றி, பேட்டிங் தரவரிசையிலும் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். தொடரில் 236 ரன்கள் குவித்த துவக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேட்டிங் தரவரிசையில் 6-வது இடத்திற்கும், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 15-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.

SCROLL FOR NEXT