கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கியது.
24 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) முதல் சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த மரியானோ நவோனேயை எதிர்கொண்டார்.
இதில் யாருமே எதிர் பார்க்காத வகையில் ஜோகோவிச் தோல்வியடைந்தார். 49-வது வரிசையில் உள்ள நவோனே 7-6 (7-5), 5-7, 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 4 மணி 36 நிமிட நேரம் தேவைப்பட்டது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் இதுவாகும்.
ஜோகோவிச் முதல் செட்டில் கடுமையாக போராடி டை பிரேக்கரில் முதல் செட்டை இழந்தார். 2-வது மற்றும் 3-வது செட்டை அவர் கைப்பற்றினார். அதன்பிறகு ஜோகோவிச்சால் தாக்கு பிடிக்க முடியவில்லை. கடைசி 2 செட்டை அவர் எளிதாக இழந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக வெளியேறினார். 39 வயதான ஜோகோவிச்சுக்கு இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அவர் கடைசியாக 2023-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் எந்த ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றது இல்லை. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியிலும், விம்பிள்டனில் அரை இறுதியிலும் தோற்றார்.
ஆனால் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறியது மிகுந்த அதிர்ச்சியானது. இதனால் ஜோகோவிச் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7-வது வரிசையில் உள்ள மெட்வெதேவ் (ரஷியா) முதல் சுற்றில் 6-4, 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஹாட்சனை (பிரான்ஸ்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் 20-வது வரிசையில் உள்ள டாமி பவுல் (அமெரிக்கா), 15-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் புப்ளிக் (கஜகஸ்தான்), 18-வது இடத்தில் இருக்கும் ஜிரிலெவொக்கா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) முதல் சுற்றில் எமிலா கேப்ரியலாவை (ருமேனியா) எதிர் கொண்டார். இதில் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
9-வது வரிசையில் உள்ள சுவிட்டோலினா (உக்ரைன்) முதல் சுற்றில் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சோலனா சியராவை (அர்ஜென்டினா) தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் 19-ம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி (இத்தாலி) 11-வது இடத்தில் உள்ள மார்தா கோஸ்டியுக் (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றில் நுழைந்தனர்.