இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய திருப்பமாக, ஐபிஎல் 2027ஆம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார். அதே நேரத்தில், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டை ரூ.27 கோடி என்ற மிக பிரம்மாண்டமான தொகைக்கு வாங்கி, லீக்கின் மிக விலையுயர்ந்த வீரராக மாற்றியது. கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணிக்காக பண்ட் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. 2025 சீசனில் வெறும் 269 ரன்களும், 2026 சீசனில் சற்று முன்னேற்றமடைந்து 312 ரன்களும் மட்டுமே எடுத்தார். பண்ட் தலைமையிலான லக்னோ அணி 2025 இல் 7-வது இடத்தையும், 2026 சீசனில் மிகவும் மோசமாக 10-வது (கடைசி) இடத்தையும் பிடித்து ஏமாற்றமளித்தது.
இந்தத் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, 2026 சீசன் முடிந்தவுடன் ரிஷப் பண்ட் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகினார். மேலும், தான் மீண்டும் டெல்லி அணிக்கு மாற விரும்புவதாக லக்னோ நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். அதனை லக்னோ நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, லக்னோ அணியின் இயக்குனர் டாம் மூடி கூறுகையில், "ரிஷப் பண்ட் தனது சொந்த விருப்பத்தின் பேரில் எங்களை அணுகி இந்த கோரிக்கையை வைத்தார். அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். லக்னோ அணியை மீண்டும் ஒரு வலுவான கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதே எங்கள் இப்போதைய நோக்கம்." என கூறியுள்ளார்.
ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், அவர் மீண்டும் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்பதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது, டெல்லி அணியின் மேலாண்மை இதைப் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் டெல்லி அணியின் கேப்டன் பதவிக்கான முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்து விளையாடி வரும் குல்தீப் யாதவ், அங்கு தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மீண்டும் ஒரு வலுவான இடத்தை பிடித்தார். இவருடைய சிறப்பான ஆட்டத்தால், ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி அணி இவரை ரூ.13.25 கோடிக்கு தக்கவைத்திருந்தது. டெல்லி அணிக்காக விளையாடிய முதல் சீசனில் (2022) 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதற்கு அடுத்தடுத்த சீசன்களிலும் முறையே 10, 16, 15 மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் முக்கிய தூணாக விளங்கினார். தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தங்களின்படி, குல்தீப் யாதவ் அடுத்த சீசனில் இருந்து லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சை பலப்படுத்த உள்ளார். இந்த அதிரடி மாற்றங்கள் ஐபிஎல் 2027 தொடரின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே அதிகரிக்கச் செய்துள்ளன.