விளையாட்டு

IPL 2026 | MI அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாண்ட்யா விலக வேண்டும் - ஸ்ரீகாந்த் வலியுறுத்தல்

அணி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மீண்டும் ஒரு முறை சந்தித்து பேச வேண்டும்.

மாலை மலர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக இருந்தும் சமீப காலமாக தடுமாறுவது குறித்து தனது யுடியுப் சேனலில் பேசியதாவது:-

இரு வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. 2 ஆண்டுக்கு முன்பு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மகுடம் சூடியது. இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்றுத்தந்த இரு கேப்டன்கள் மும்பை அணியில் வீரர்களாக உள்ளனர். அதேசமயம் உலகக் கோப்பையில் அவர்களது கேப்டன்ஷிப்பில் ஆடிய ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் கேப்டனாக இருக்கிறார். இது சற்று விசித்திரமாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் ஹர்திக் பாண்ட்யாயை எனக்கு பிடிக்கும். அவர் அற்புதமான ஒரு வீரர். சிறந்த கேப்டனும் கூட. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்றுள்ளார். அவருக்கு மும்பை அணி நிர்வாகம் கேப்டன் பதவி வழங்கியிருப்பது அவர்களது உள்விவகாரம் அல்லது கொள்கை சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. கடைசி இரு ஆண்டுகளில் கேப்டன்ஷிப்பில் அசத்தும் அவரது வெற்றி சராசரி 95 சதவீதமாக உள்ளது.

எனவே அணி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மீண்டும் ஒரு முறை சந்தித்து பேச வேண்டும். பாண்ட்யா, 'இந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கட்டும்' என்று சொல்லலாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அவர்கள் சூர்யகுமார் யாதவை எப்போது வேண்டுமென்றாலும் கேப்டனாக நியமிக்கலாம். ஆனால் இப்போதே அதை செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல.

என்னை பொறுத்தவரை, ஹர்திக் பாண்ட்யா தாமாகவே முன்வந்து, 'நான் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தட்டும். அவர் உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன். அவருக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்' என்று சொல்ல வேண்டும். பாண்ட்யாவே முன்வந்து இவ்வாறு கூறினால், எல்லா பிரச்சி னையும் தீர்ந்து விடும். ஹர்திக் பாண்ட்யா இதை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

இதற்கிடையே மற்றொரு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஐ.பி.எல்.-ல் கடைசி நேரத்தில் விலகும் அல்லது தாமதமாக அணியுடன் கைகோர்க்கும் வெளிநாட்டு வீரர்களை கடுமையாக தாக்கியுள்ளார். 'பல்வேறு காரணங்களால் சில வெளிநாட்டு வீரர்கள் தொடக்கத்தில் ஐ.பி.எல். அணித் தேர்வுக்கு தயாராக இருக்கமாட்டார்கள் என கேள்விப்படுகிறோம். ஏலத்திற்கு முன்பு எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல், இப்போது தனிப்பட்ட காரணத்துக்காக வரமாட்டோம் அல்லது தாமதமாக வருகிறோம் என்று சொல்வது அணியின் ஒட்டுமொத்த திட்டத்தையும் சீர்குலைத்து விடும். அணி உரிமையாளர்கள் இந்த விவகாரத்தை கடுமையாக எடுத்துக்கொண்டு, தங்களுக்கு விருப்பமான நேரத்தில் வரும் வீரர்களை அணியில் இருந்து க்க வேண்டும். அப்போது தான் த்தகைய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

சில சமயம் அணி உரிமையாளர்கள் வீரர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் சகல வசதி வாய்ப்புகளையும் சொந்த செலவில் செய்து கொடுக்கிறார்கள். இது இந்தியர்களின் விருந்தோம்பல். ஆனால் இதை சில வெளி நாட்டு வீரர்கள் தங்களுக்கான உரிமை என்று தவறாக புரிந்து கொண்டு அந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.' என்று கவாஸ்கர் கூறி உள்ளார்.