2023 இல் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் சிங் இருந்தார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
ஆனால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் 2023 ஜனவரி தொடங்கி சுமார் 6 மாதம் காலம் வீரர், வீராங்கனைகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதன் பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரிஜ் பூஷன் சிங் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
சம்மேளனம் கலைக்கப்பட்டு பின் பிரிஜ் பூஷனின் நெருங்கிய சகா சஞ்சய் சிங் தலைமையில் தற்போது இயங்கி வருகிறது.
வினேஷ் போகத்
2023 போராட்டத்தில் முக்கிய முகங்களாக இருந்த வீரர்களில் ஒருவர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.
போராட்டத்தில் ஈடுக்கப்பட்ட சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோரை காவல்துறையினர் சாலையில் இழுத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
31 வயதான வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் உடல் எடை காரணமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஓய்வை அறிவித்தார்.
பின்னர் அரசியலில் நுழைந்த அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும், மல்யுத்தத்தின் மீதான காதலால் மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுத் தீவிரமாகத் தயாராகி வருகிறார்.
ஆனால் மே 10-12 தேதிகளில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேசிய ஓபன் ரேங்கிங் தொடரில் தன்னை விளையாட விடாமல் சம்மேளனம் தடுப்பதாக வினேஷ் போகத் குற்றம்சாட்டினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுக்குச் செல்ல இந்த தொடரில் பங்கேற்பது அவசியமாகும்.
வீடியோ
இந்நிலையில் வினேஷ் போகத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய அவர், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்த ஆறு வீராங்கனைகளில் ஒருவர் தான் என்பதை முதல்முறையாக பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், இதுவரை தனது அடையாளத்தை மறைத்து வந்த வினேஷ் போகத் தற்போது அதை வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்றாலும், தற்போதையச் சூழ்நிலை காரணமாகத் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 தனது மறுபிரவேசத்தைத் தடுக்க மல்யுத்த சம்மேளனம் முயற்சிப்பதாக வினேஷ் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரிஜ் பூஷன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், தற்போதைய தலைவர் சஞ்சய் சிங் மூலமாக அவரே சம்மேளனத்தைக் கட்டுப்படுத்துவதாக வினேஷ் கூறியுள்ளார்.
பிரிஜ் பூஷனின் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில், அவருக்குச் சொந்தமான கல்லூரியிலேயே ஓபன் ரேங்கிங் மல்யுத்தத் தகுதிப் போட்டிகளை நடத்தச் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இது நேர்மையான போட்டிக்கு வழிவகுக்காது என்றும், நடுவர்கள் முதல் புள்ளிகள் வரை அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் வினேஷ் கவலை தெரிவித்துள்ளார்.