விளையாட்டு

பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: சிலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடமும், அமெரிக்கா 2-வது இடமும், 'பி' பிரிவில் நியூசிலாந்து முதலிடமும், சிலி அணி 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில், இன்று நடந்த அரையிறுதியில் இந்திய அணி சிலி அணியுடன் மோதியது. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடி கோல் மழை பொழிந்தனர்.

நவ்னீத் கவுர் 6, 13வது நிமிடத்திலும், தீபிகா 14, 18வது நிமிடத்திலும், நேஹா 32 வது நிமிடத்திலும், ருதுஜா டடாசோ 39வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இறுதியில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.