கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் தொடரின் குரோஷிய பகுதியில், இறுதி நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
பிரான்ஸ் நாட்டின் ஃபிரூஜா அலிரேசா 23.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். பிரக்ஞானந்தா, மற்றொரு பிரெஞ்சு வீரரான மாக்சிம் வாஷியர்-லாக்ரேவுடன் இணைந்து 21.5 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்திய நட்சத்திர வீரரா பிரக்ஞானந்தா, இறுதி நாளை வின்சென்ட் கெய்மரிடம் தோல்வியுடன் தொடங்கினாலும், கடைசி எட்டு ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்று சிறப்பாக செயல்பட்டார்.
முக்கிய இலக்கு:
இவரது மற்றொரு தோல்வி சக நாட்டவரான டி. குகேஷிடம் ஏற்பட்டது, ஆனால் பிரக்ஞானந்தாவின் முக்கிய இலக்கு அலிரேசா தான். தொடக்க நாளில் நடந்த பிளிட்ஸ் சுற்றில், சாத்தியமான ஒன்பது புள்ளிகளில் எட்டு புள்ளிகளை பெற்று சிறப்பாக தொடங்கிய அலிரேசாவுக்கு, இறுதி நாள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
அவரால் வெறும் 5 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்ததால், உஸ்பெக் வீரர் நொதிர்பெக் அப்துசத்தோரோவ் 23.5 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த தரவரிசையில் அவரை முந்தினார்.
இறுதி சுற்று:
இது ஒரு டை-பிரேக் இறுதி சுற்றுக்கு வழிவகுத்தது, அதில் முதல் இரண்டு ஆட்டங்கள் சமனில் முடிந்தன. அதன்பிறகு, அர்மகெடான் சுற்றில் அப்துசத்தோரோவுடன் பிரெஞ்சு வீரர் சமன் செய்து சாம்பியன் பட்டம் வென்றார். கருப்பு காய்களுடன் ஆடிய அவருக்கு ஒரு சமன் மட்டுமே தேவைப்பட்டது.
ஜெர்மனியை சேர்ந்த கெய்மர் மொத்தம் 20 புள்ளிகள் பெற்று, ஆறாவது இடத்தை பிடித்த நடப்பு உலக சாம்பியனான குகேஷை விட 1.5 புள்ளிகள் முன்னிலை பெற்றார். டச்சு கிராண்ட்மாஸ்டர் அனிஷ் கிரி 17 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும், டீக் போக்தான் டேனியல் 15 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும் பிடித்தனர்.
10 வீரர்கள் கொண்ட போட்டியில், ஹாலந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட் 12.5 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தையும், உள்ளூர் நட்சத்திர வீரரான இவான் சாரிக் வெறும் ஏழு புள்ளிகளுடன் பத்தாவது இடத்தையும் பிடித்தனர்.
போட்டி தரவரிசை:
கிராண்ட் செஸ் சுற்றுப் போட்டி தரவரிசையில், அமெரிக்காவின் ஃபாபியானோ கருவானா 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். கெய்மர் 19 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார், இவர் அலிரேசாவை விட ஒரு புள்ளி முன்னிலையில் உள்ளார். தற்போதைய ஆறாவது இடத்திற்காக 11.5 புள்ளிகளைப் பெற்றுள்ள பிரக்ஞானந்தாவிற்கு, இனி வரும் பாதை கடினமானதாக உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜி.சி.டி. போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற பிரக்ஞானந்தா இன்னும் வலுவாக மீண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டள்ளது.
சுற்றுப்பயணத்தின் அடுத்த இரண்டு போட்டிகள் செயின்ட் லூயிஸில் நடைபெறும். அதில் ஒரு ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டியை தொடர்ந்து ஒரு கிளாசிக்கல் போட்டி நடைபெறும்.