அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை ஜி.கமலினிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொண்டது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை கணக்கை தொடங்கியது.
மதுரையை சேர்ந்த இளம் திறமைசாலியான ஜி.கமலினியின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய முதலமைச்சர், சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வேகமாக வளர்ந்து வரும் அவரது கிரிக்கெட் பயணத்தில் இந்த ஆசிய விளையாட்டுத் தங்கம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் மேலும் பல சாதனைகளை படைக்க தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு தொடர்ந்து வழங்கும் என்றும், இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் முதலமைச்சர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.