

இந்திய அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று பி பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி `பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியா 20-1 என தாய்லாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா ஷெராவத் அபாரமாக விளையாடினார். தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல்களாக மாற்றினார். அவர் 2, 8, 9, 24, 33, 36, 39, 51 மற்றும் 57-வது நமிடங்களில் கோல்கள் அடித்தார். இவர் மொத்தம் 9 கோல் அடித்தார். அத்துடன் ஆசிய விளையாட்டு போட்டியில் அதிக கோல் அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 9 கோல்களையும் பெனால்டி கார்னர் மூலம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி அடுத்த போட்டியில் வருகிற 25-ந்தேதி (நாளைமறுதினம்) ஜப்பானை எதிர்கொள்கிறது. 27-ந்தேதி சிங்கப்பூரை எதிர்கொள்கிறது. ஒரு பிரிவில் 6 அணிகள் இடம் பிடித்துள்ளன. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் வெண்கல பதக்கத்திற்காக விளையாடும். வெற்றி பெறும் அணிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களுக்காக விளையாடும்.
அதன்பின் 5 முதல் 8, 7-வது 8-வது மற்றும் 9 வது 10வது மற்றும் 11-வது 12-வது இடத்திற்கான போட்டிகள் நடைபெறும்.