23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடந்து வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் சுற்று முடிவில் சிறப்பாக ஆடிய அணிகள் ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. தற்போது இந்தச் சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறின.
பராகுவே, பிரான்ஸ், கனடா, மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்கா, பெல்ஜியம், பிரேசில், நார்வே, மெக்சிகோ, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, எகிப்து, சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
இதில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டியில் ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய ஸ்பெயின் அணி போர்ச்சுகலை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில், பெல்ஜியம் அணி அமெரிக்க அணியை 4-1 என வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
வரும் 10-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்சில் இந்தப் போட்டி நடக்கிறது.
மற்ற காலிறுதிப் போட்டிகளில் பிரான்ஸ்-மொராக்கோ மற்றும் இங்கிலாந்து-நார்வே அணிகள் மோதவுள்ளன.