கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: சுவீடனை 5-1 என வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது நெதர்லாந்து

ஆரம்பம் முதலே நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரி விலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று இரவு நடந்த 'எப்' பிரிவு லீக் போட்டியில் சுவீடன், நெதர்லாந்து அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 5, 17-வது நிமிடங்களில் அந்த அணியின் வீரர் பிரையன் பிராப்பி 2 கோல்கள் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் நெதர்லாந்து 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 47, 54-வது நிமிடங்களில் நெதர்லாந்து அணியின் காக்போ 2 கோல்கள் அடித்தார்.

தொடர்ந்து போராடிய சுவீடன் அணி 59-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அந்த கோலை அந்த அணியின் வீரர் எலங்கா அடித்தார்.

கடைசி கட்டத்தில் 89-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் சம்மர்வில் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.