23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடந்து வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் சுற்று முடிவில் சிறப்பாக ஆடிய அணிகள் ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. தற்போது இந்தச் சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
பராகுவே, பிரான்ஸ், கனடா, மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்கா, பெல்ஜியம், பிரேசில், நார்வே, மெக்சிகோ, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, எகிப்து, சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
இதில் நேற்று இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டியில் கனடா, மொராக்கோ அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய மொராக்கோ அணி கனடாவை 3-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில், பிரான்ஸ் அணி பராகுவே அணியை 1-0 என வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த பிரான்ஸ், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
வரும் 9-ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு பாஸ்டன் நகரில் இந்தப் போட்டி நடக்கிறது.
கடந்த 2022 உலகக் கோப்பையில் இந்த இரு அணிகளும் அரையிறுதியில் மோதின. இதில் பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தது.
இந்த தோல்விக்கு மொராக்கோ அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.