பிஃபா உலக கோப்பையில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு இரண்டு போட்டிகள் நடைபெற்றது. ஜே பிரிவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் ஒன்றில் அர்ஜென்டினா- ஜோர்டான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இன்றைய போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்சி, தொடக்கத்தில் களம் இறங்கவில்லை. பெஞ்சில் இருந்தார். ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கியோவானி லோ செல்கோ முதல் கோலை அடித்தார். 31-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு பொனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மார்ட்டினஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் ஆர்ஜென்டினா 2-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. 55-வது நிமிடத்தில் ஜோர்டான் அணியின் முசா அல்-தாமரி கோல் அடித்தார். 59-வது நிமிடத்தில் மெஸ்சி மாற்று வீரராக களம் இறங்கினார். அவர் 80-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா 3-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஜே குரூப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஆஸ்திரியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.
| நாடு | கோல் | அடித்தவர் |
|---|---|---|
| அர்ஜென்டினா | 3 | செல்கோ (19 P) மார்ட்டினஸ் (31 P) மெஸ்சி (80) |
| ஜோர்டான் | 1 | முசா அல்-தாமரி (55) |
மற்றொரு போட்டியில் ஜே பிரிவில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரியா- அல்ஜீரியா அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஆட்டம் தொடங்கிய 28-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்தார். முதல்பாதி நேர ஆட்டம் நிறைவடைவதற்கான கடைசி நிமிடமான 45-வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ரபிக் பெல்காலி கோல் அடித்தார். இதனால் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றன.
2-வது பாதி நேர ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தன. ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மால்சல் சபிட்ஜெர் கோல் அடித்தார். அதற்கு போட்டியாக அல்ஜீரியாவின் ரியாத் மரேஸ் 60-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.
காயம் மற்றும் போட்டி நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் அதாவது 90+3 நிமிடத்தில் ரியாத் மரேஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அல்ஜீரியா 3-2 என முன்னிலை பெற்றது. இதன் காரணமாக அர்ஜீரியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 90+6-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் சசா கலாஜ்ட்ஜிக் கோல் அடிக்க போட்டி 3-3 என டிராவில் முடிந்தது. இதன்மூலம் ஆஸ்திரியா 4 புள்ளிகள் பெற்று கோல்கள் அடிப்படையில் 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
| நாடு | கோல் | அடித்தவர் |
|---|---|---|
| ஆஸ்திரியா | 3 | மார்கோ அர்னாடோவிச் (28) மால்சல் சபிட்ஜெர் (55) மெஸ்சி (80) சசா கலாஜ்ட்ஜிக் (90+6) |
| அல்ஜீரியா | 3 | ரபிக் பெல்காலி (45) ரியாத் மரேஸ் (60, 90+3) |