பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது ரவுண்ட் ஆஃப் 32 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 போட்டிகள் நடைபெறும். அதன்பிறகு காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும். உலக கோப்பையை கைப்பற்ற இறுதிப் போட்டியுடன் 5 நாக்அவுட் போட்டிகளில் விளையாட வேண்டும்.
இந்த தொடரில் கத்துக்குட்டி அணிகள் கூட ஜாம்பவான் அணிகளுக்கு சவால் விடும் வகையில் விளையாடி வருகின்றன. பிபா அணிகள் தரவரிசையில் தற்போது முதல் 10 இடத்திற்குள் அர்ஜென்டினா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில், மொராக்கோ, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், மெக்சிகோ, பெல்ஜியம் ஆகிய அணிகள் உள்ளன.
தரவரிசையில் டாப் 10-க்குள் இடம் பிடித்திருந்த ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகள் தோல்வியை தழுவியுள்ளன. இதில் ஜெர்மனி தோல்வியுடன் முதல் 10 இடங்களை இழந்து 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ரவுண்டாஃப் 32-ல் ஜெர்மனி- பராகுவே இடையிலான போட்டி 1-1 என டிராவில் முடிவடைந்தது. அதன்பின் பெனால்டி ஷூட்அவுட்டில் 3-4 எனத் தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் பராகுவே ரவுண்ட்ஆஃப் 16-க்கு முன்னேறியதன் மூலம் 7 இடங்கள் முன்னேறி 34-வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் 10 இடங்களுக்குள் உள்ள மொராக்கோ- நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி கோல்கள் இன்றி முடிவடைந்தது. இதனால் பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என மொராக்கோ வெற்றி பெற்றது. இதன்மூலம் முன்னணி இரண்டு அணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐவரிகோஸ்ட்- நார்வே அணிகள் மோதுகின்றன. அதிகாலை 2.30 மணிக்கும் நடைபெறும் போட்டியில் பிரான்ஸ்- சுவீடன் அணிகள் விளையாடுகின்றன. நாளை காலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மெக்சிகோ- ஈகுவடார் பலப்பரீட்சை நடத்துகின்றன.