உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் சுற்றில் ஸ்பெயின் மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. க்ரூப் H-இல் இடம்பெற்றுள்ள இரு அணிகள் இடையிலான போட்டி அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியது முதலே கோல் அடிக்கும் முனைப்பில் ஸ்பெயின் அணி தீவிரம் காட்டியது. இதற்கு பலனாக ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒயர்சபால் அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்ட லமைன் யமால் கோலாக மாற்றினார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது.
ஸ்பெயின் அபாரம்:
இதைத் தொடர்ந்து 21-ஆவது நிமிடத்தில் ஏமெரிக் லபோர்டி அமைத்து கொடுத்த செட்-அப்-ஐ சரியாக பயன்படுத்திய மைக்கேல் ஒயர்சபால் கோல் அடிக்க ஸ்பெயின் அணி 2-0 என முன்னேற்றம் கண்டது. மேலும் 24-ஆவது நிமிடத்தில் டேனி ஒல்மோ செட்-அப்பில் மைக்கேல் தனது 2-ஆவது கோலை அடிக்க ஸ்பெயின் அணி 3-0 என்ற நிலையை அடைந்தது.
ஒருபக்கம் ஸ்பெயின் கோல் கணக்கை அதிகப்படுத்த மறுப்பக்கம் சவுதி அரேபியா அணியின் கோல் முயற்சிகள் எதற்கும் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி வரை ஸ்பெயின் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஓன் கோல்:
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டிய நிலையில், 49-ஆவது நிமிடத்தில் சவுதி அரேபிய வீரர் ஹாசன் அல்டாம்பக்தி ஓன் கோல் அடிக்க ஸ்பெயின் அணி 4-0 என முன்னேறியது. ஆட்டத்தின் இறுதிவரை சவுதி அரேபியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஸ்பெயின் அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.