கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 கணக்கில் போஸ்னியா அபார வெற்றி

சிறந்த எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'குரூப் பி' ஆட்டத்தில், கத்தாரை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் போஸ்னியா- அந்த அணியை போட்டியில் இருந்து வெளியேற்றியதுடன், உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் வலுப்படுத்திக்கொண்டது.

இந்த வெற்றியின் மூலம், தங்கள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்த போஸ்னியா இந்தத் தொடரில் 'ரவுண்ட் ஆஃப் 32' (Round of 32) சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. மொத்தம் உள்ள 12 பிரிவுகளில் மூன்றாம் இடத்தை பிடித்த அணிகளில் சிறந்த எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆட்டத்தின் 29-ஆவது நிமிடத்தில் கெரிம் அலஜ்பெகோவிச் கோல் அடிக்க போஸ்னியா முன்னிலையை பெற்றது. 34-ஆவது நிமிடத்தில் போஸ்னியா தனது இரண்டாவது கோலை அடித்தது. எடின் ஜெகோ அடித்த 'வாலி' ஷாட், கத்தார் வீரர் சுல்தான் அல்-பிரேக் மீது பட்டு திசைமாறி 'ஓன் கோல்' ஆக மாறியது.

இத்தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத கத்தார் அணியை, 42-வது நிமிடத்தில் ஹசன் அல் ஹைடோஸ் அடித்த கோல் ஆட்டத்தில் தொடர்ந்து போட்டியிடும் நிலையில் வைத்திருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில், 80-ஆவது நிமிடத்தில் எர்மின் மிமிக் கோல் அடிக்க போஸ்னியா 3-1 கணக்கில் முன்னிலை பெற்றது.