உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி தொடர்ச்சியாக 2-வது முறை உலக கோப்பையை வென்று சாதிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர்களின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றம் அளித்தது. ஸ்பெயின் அணிக்கு எந்த கட்டத்திலும் அந்த அணியால் சவாலாக விளங்க முடியவில்லை.
இறுதிப் போட்டியில் தோற்றதால் அர்ஜென்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்சி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். சோகத்தில் அவர் கண்ணீர் சிந்தினார். உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற முடியாமல் போனது அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மெஸ்சி நிருபர்களிடம் கூறியதாவது:-
தோல்வியால் நான் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். ஆனால் எங்களால் முடிந்த வரை சிறப்பாக விளையாடினோம் என்பதை நான் அறிவேன். உண்மையை சொல்லப் போனால் அவர்கள் (ஸ்பெயின்) சிறப்–பாக விளையாடினார்கள்.
ஸ்பெயின் மிக சிறந்த அணியாகும். நாங்கள் ஆட்டத்தில் தோற்றோம். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக நாங்கள் இதுவரை செய்த அனைத்தையும் மறந்து விடுவோம் என்று அர்த்தமில்லை. எனவே எனது மக்களுக்கும், சக வீரர்களுக்கும், என் நாட்டு மக்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.
மெஸ்சி விளையாடிய 6-வது உலக கோப்பை இதுவாகும். அதிக உலக கோப்பையில் விளையாடிய வீரர்களில் ரொனால்டோவுடன் இணைந்து அவர் சாதனை புரிந்தார். அவர் மொத்தம் 21 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். இந்த உலக கோப்பையில் அவர் 8 கோல்கள் அடித்து 4 கோல்கள் அடிக்க சக வீரர்களுக்கு உதவியாக இருந்தார்.
அர்ஜென்டினா அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு வந்து சிறந்த நிலை அடைய காரணமாக இருந்தவர் மெஸ்சி என்பது குறிப்பிடத்தக்கது. 39 வயதிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தி இருந்தார்.
மெஸ்சி தனது ஓய்வு முடிவை எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மெஸ்சியின் பங்களிப்பை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி பாராட்டினார். இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அவர் கூறியதாவது:-
மெஸ்சி மீது அனைவரும் பெருமை ெகாள்வார்கள் என்று நம்புகிறேன். அவர் சாதித்ததற்காக பெருமை கொள்வார்கள். ஏனெனில் கால்பந்தில் காலடி வைத்தவர்களில் அவர்தான் மிகச் சிறந்த வீரர்.
இவ்வாறு அவர் கூறினார்.
48 நாடுகள் பங்கேற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 308 கோல்கள் (104 ஆட்டம் ) அடிக்கப்–பட்டது. இது ஒரு போட்டியி் அடிக்கப்பட்ட கோல்களின் சராசரி 2.96 ஆகும். பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அதிகபட்சமாக 10 கோல்கள் அடித்து முதல் இடத்தை பிடித்தார். அதற்கு அடுத்தப்படியாக மெஸ்சி (அர்ஜென்டினா) 8 கோல்களை பதிவு செய்தார். பெலலிங்கம் (இங்கிலாந்து), எர்லிங் ஹாலண்ட் (நார்வே) தலா 7 கோலும், ஹாரி கேன் (இங்கிலாந்து), உஸ்மான் டெம்பலே (பிரான்ஸ்) தலா 6 கோலும், மைக்கேல் ஒயர்சபால் (ஸ்பெயின்) 5 கோலும் அடித்தனர்.
நாடுகளை பொறுத்தவரை இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் தலா 20 கோல்கள் அடித்தன. அர்ஜென்டினா 19 கோல்களை பதிவு செய்தது. உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் மொத்தம் 14 கோல்கள் அடித்தது.