கால்பந்து

கண்ணீருடன் உலகக் கோப்பையில் இருந்து விடைபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று போட்டிக்கு முன்னதாகவே அறிவித்து இருந்தார்.

ஸ்பெயினுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் வெளியேறியதால், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில் மாற்று வீரரான மிக்கேல் மெரினோ கோல் அடித்ததால், ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆறுதல்:

2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதன்முதலில் விளையாடிய ரொனால்டோ, இந்த உலகக் கோப்பையே தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று போட்டிக்கு முன்னதாகவே அறிவித்து இருந்தார். இந்தப் போட்டி நிறைவை குறிக்கும் இறுதி விசில் ஒலித்த பிறகு, போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

டல்லாஸ் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அந்த சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரரை உற்சாகப்படுத்த, அவரது போர்ச்சுகல் அணி வீரர்கள் சிலர் அவருக்கு ஆறுதல் கூறினர்.

முடிவு:

2010-இல் தென் ஆப்பிரிக்காவில் தனது ஒரே உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஸ்பெயின் முதல் முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி வருகிற வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்கா அல்லது பெல்ஜியம் அணியுடன் விளையாடும்.

ரொனால்டோ, முதல் முறையாக, தொடர்ச்சியாக இரண்டாவது தொடரில் போர்ச்சுகலை காலிறுதிக்கு அழைத்து செல்ல முயன்றார். ஆனால், சர்வதேச கோல்களில் எல்லா காலத்திலும் முன்னணியில் இருக்கும் அவரது கால்பந்து வாழ்க்கை, கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் முடிவுக்கு வந்துவிட்டது.