23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடந்து வருகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள 5 முறை சாம்பியனான பிரேசில்-ஹைத்தி அணிகள் மோதின.
பிரேசில் அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடினார்கள். அவர்களது அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் ஹைத்தி அணி வீரர்கள் திணறினர்.
ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் பிரேசில் அணி முதல் கோலை அடித்தது. அந்த அணி வீரர் மத்யாஸ் குன்ஹா இந்த கோலை அடித்தார். தொடர்ந்து பிரேசில் அணி முன்னேறி விளையாடியது.
36-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. முன்னணி வீரரான வின்சியஸ் ஜூனியர் தட்டிக் கொடுத்த பந்தை குன்ஹா கோலாக்கினார். அவர் தொடர்ந்து 2-வது கோலை பதிவு செய்தார்.
முதல் பாதி முடியும் நேரத்தில் பிரேசில் 3-வது கோலை அடித்தது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான வின்சியஸ் ஜூனியர் இந்த கோலை அடித்தார். அவர் இந்தப் போட்டி தொடரில் அடித்த 2-வது கோலாகும். லூகாஸ் பகிடோ தட்டிக் கொடுத்த பந்தை அவர் கோல் ஆக்கினார்.
முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் பிரேசில் அணி 3-0 என முன்னிலை பெற்றது.
2-வது பாதி ஆட்டத்திலும் பிரேசில் அணி தொடர்ந்து முன்னேறி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. ஆனாலும் அந்த அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் ஆட்டம் முடியும்வரை ஹைத்தி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில், பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டி தொடரில் அந்த அணியின் முதல் வெற்றி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் மொராக்கோவுடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்து இருந்தது.
சி பிரிவில் பிரேசில், மொராக்கோ அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஸ்காட்லாந்து 3 புள்ளிகள் எடுத்துள்ளது.