அர்ஜென்டினா- எகிப்து
கால்பந்து

உலக கோப்பையில் இருந்து அர்ஜென்டினாவை வெளியேற்றுங்க.., ஆன்லைனில் விஸ்வரூபம் எடுத்த கையெழுத்து பிரசாரம்

எகிப்து வீரருக்கு எதிராக அர்ஜென்டினா வீரர்கள் தவறாக செயல்பட்டதால் பெனால்டி வாய்ப்பு கேட்கப்பட்ட நிலையில், அது மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

உலக கோப்பையில் இருந்து அர்ஜென்டினா அணியை வெளியேற்றுங்கள் என ஆன்லைன் பிரசாரத்தில் 75 லட்சம் பேர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ்- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின, இதில் ஸ்பெயின் 2-0 என வெற்றி பெற்றது.

இன்று நள்ளிரவு நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடர் தொடங்கியதில் இருந்து பிபா மற்றும் நடுவர்கள் நடப்பு சாம்பியன் அணியான அர்ஜென்டினா மற்றும் அந்த அணியின் கேப்டன் மெஸ்சிக்கு ஆதரவு செயல்படுவதாக மற்ற அணிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டின.

எகிப்துக்கு எதிரான போட்டியில் சர்ச்சை

எகிப்து அணிக்கெதிரான நாக்அவுட் போட்டியில் ஒரு கட்டத்தில் எகிப்பு 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் அர்ஜென்டினா 13 நிமிடங்களில் 3 கோல் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது, எகிப்து அணி 2-0 என முன்னிலையில் இருந்தபோது, அவர்களின் முக்கியமான கோல் ஒன்று VAR மூலம் ரத்து செய்யப்பட்டது. மேலும், எகிப்து வீரர் முகமது சலா மீது பெனால்டி எல்லைக்குள் நடந்த தவறான செயலுக்கு நடுவர் அனுமதி மறுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, என்ஸோ பெர்னாண்டஸ் 93-வது நிமிடத்தில் கோல் அடிக்க அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. இதனால் ஆத்திரமடைந்த எகிப்து கால்பந்து சம்மேளனம் (EFA) பிபாவிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது. எகிப்து பயிற்சியாளர் ஹோஸாம் ஹசன் இப்போட்டி "முன்கூட்டியே திட்டமிடப்பட்டது" என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். எனினும், எகிப்தின் கோரிக்கையை பிபா நிராகரித்ததுடன், நடுவர்களின் முடிவுகள் தொழில்நுட்ப ரீதியாகச் சரியானவை என்றது.

இது கால்பந்து ரசிகர்களை ஆதங்கத்தில் ஆழ்த்தியது. பிபா மற்றும் நடுவர்கள் இப்படி அர்ஜென்டினா மற்றும் மெஸ்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் என்ன ஆர்த்தம்? என கேள்வி எழுப்பினர்.

கையெழுத்தி இயக்கம்

அத்துடன் 'Kick Argentina Out' Of FIFA World Cup 2026 என ஆன்லைன் மூலம் ஆதரவை திரட்டி வருகின்றனர். இந்த பிரசார இயக்கத்திற்கு ஆதரவாக 75 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த பிரசார அறிக்கையில் "பிபா (FIFA) மற்றும் நடுவர்கள் லியோனல் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினாவுக்குச் சார்பாகச் செயல்படுகிறார்கள் என்பது வெளிப்படை. வெற்றியாளர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், உலகின் மற்ற நாடுகள் ஏன் போட்டியிட வேண்டும்? அர்ஜென்டினாவை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றிவிட்டு மற்ற அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குங்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.