உலகக் கோப்பை கால்பந்து: எகிப்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா

ஆட்டத்தின் முதல் பாதி வரை எகிப்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து: எகிப்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் எகிப்து அணிகள் களமிறங்கின. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே எகிப்து அணி அதிரடியாக விளையாடியது. ஆட்டத்தின் 15-ஆவது நிமிடத்தில் எகிப்து அணி முதலாவது கோல் அடித்தது. எகிப்து அணிக்காக மராவன் அட்டியா அசிஸ்ட் செய்ய யாசர் இப்ராகிம் கோல் அடித்து அசத்தினார்.

எகிப்து அசத்தல்:

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டிய நிலையில், ஆட்டத்தின் முதல் பாதி வரை எகிப்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய எகிப்து அணி 67-ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது.

இந்த முறை ஹைசெம் ஹசன் அசிஸ்ட் செய்ய முஸ்தஃபா சிகோ கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வீரர்களை மாற்ற 79-ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி அசிஸ்ட் செய்ய க்ரிஸ்டியன் ரொமெரோ கோல் அடிக்க அர்ஜென்டினா தனது கோல் கணக்கை தொடங்கியது.

மெஸ்ஸி அபாரம்:

தொடர்ந்து 83-ஆவது நிமிடத்தில் மான்டியல் அசிஸ்ட்-இல் லியோனல் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் 2-2 என ஆட்டம் சமநிலைக்கு வந்தது.

ஆட்டத்தின் கடைசியில் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில், அர்ஜென்டினா அணிக்கு லௌடரோ மார்டினெஸ் அசிஸ்ட் செய்ய என்சோ ஃபெர்னான்டஸ் கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 3-2 என முன்னிலை பெற்றது.

இதன் பிறகு ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அர்ஜென்டினா 3-2 என வெற்றி பெற நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com