இந்திய டி20 அணியில் 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளார். அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் அயர்லாந்துக்கு எதிராக களம் இறக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் 4 போட்டிகள் முழுமையாக நடைபெற்றன. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
4 போட்டிகளிலும் இரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றார். ஆனால் சரியாக விளையாடவில்லை. ஜிம்பாப்வே அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார். இதில் இரண்டு அரைசதங்களுடன் 151 ரன்கள் குவித்தார். 3-வது போட்டியில் 81 ரன்கள் விளாசினார். அத்துடன் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி அசத்தினார்.
முதல் போட்டியில் 19 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 50 ரன்கள் அடித்தார். 2-வது போட்டியில் 9 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 20 ரன்கள் சேர்த்தார். கடைசி போட்டியில் 49 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 81 ரன்கள் விளாசினார்.
கடைசி போட்டியில் கேட்ச் பிடிக்க சென்றபோது, சூர்யவன்ஷிக்கு காயம் ஏற்பட்டது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷ்மண் இருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்தமாக உடற்தகுதியில் மேம்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்ஷ்மண் கூறியதாவது:-
வைபவ் சூர்யவன்ஷி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பும் ஒரு விஷயம் அவரது ஒட்டுமொத்த உடற்தகுதிதான். வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வயதுடையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவரே விரும்புகிறார். டீப் ஸ்கொயர் லெக் (deep square leg) பகுதியிலிருந்து ஓடிவந்து டைவிங் கேட்ச் (diving catch) பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து களத்தில் இருக்கவே விரும்பினார்.
எங்கள் பிசியோதான் அவரை வெளியே வருமாறு கேட்டுக்கொண்டார். அணியின் நலனுக்காக முடிந்த வழிகளிலெல்லாம் பங்களிக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் தீவிரமும் அத்தகையது.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் முதன்முறையாக விளையாடியபோதே, நெருக்கடியை அவர் கையாண்ட விதம் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. எந்தவொரு ஐபிஎல் போட்டியும் ஒரு சர்வதேச போட்டிக்கு இணையானது என்றே நான் கருதுகிறேன். 14 அல்லது 15 வயதில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்போது, அந்த சூழலை கண்டு மலைத்துப்போகவோ அல்லது அந்த நெருக்கடியை ஏற்றுக்கொண்டு செயல்படவோ வாய்ப்புள்ளது. அவர் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்தார் என்று நான் நினைக்கிறேன்.
ஆகவே, இந்தத் தொடர் சென்ற விதம் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. சதம் அடிக்காதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இது அவருக்கு கிடைக்கும் முதல் அல்லது கடைசி வாய்ப்பாக இருக்காது என்று நாங்கள் அவரிடம் கூறியிருந்தோம். அவருக்கு முன்னால் ஒரு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான மனப்பான்மையும் மனநிலையும் அவரிடம் உள்ளது. அவர் முன்னேறி, சர்வதேச அளவில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதைச் செய்வதற்கான அனைத்து ஆற்றலும் திறமையும் அவரிடம் உள்ளது.
இவ்வாறு லக்ஷ்மண் தெரிவித்தார்.