இங்கிலாந்து- இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். கடந்த 10-ந்தேதி இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. 4 நாட்கள் கொண்ட இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 285 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதில் சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 83 ரன்கள் சேர்த்தார். ஹர்மன்பிரீத் கவுர் 58 ரன்கள் எடுத்தார். தீப்தி ஷர்மா 57 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் சோபி எக்லெஸ்டோன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். லாரன் பைலர், ஈசி வோங் மற்றும் மேடி வில்லியர்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் வெறும் 170 ரன்களில் சுருண்டது. இந்திய வீராங்கனை கிராந்தி கார்டு 5 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸ் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார்.
225 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஸ்மிரிதி மந்தனா 70 ரன்கள் விளாசினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா சதம் (113) விளாசினார். ரிச்சா கோஷ் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் அடிக்க இந்தியா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் குவித்தது.
இதனால் இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. எமி ஜோன்ஸ் 52 ரன்களுடனும், எக்லெஸ்டோன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 4-வது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. எமி ஜோன்ஸ் மேலும் 2 ரன்கள் சேர்த்து 54 ரன்களில் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இஸ்சி வாங் 1 ரன்னிலும், லாரன் பெல் ரன்ஏதும் எடுக்காமலும் சர்மா பந்தில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஷோபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடினார்.
கடைசி விக்கெட்டுக்கு இவருடன் லாரன் ஃபிலர் ஜோடி சேர்ந்தார். எக்லெஸ்டோன் அரைசதம் அடித்தார். 50 ரன்கள் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 186 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஸ்நே ராணா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.